‘பரோல்’ வழக்கில் காணொலிக்காட்சி மூலம் வாதாட விருப்பமா? நளினிக்கு ஐகோர்ட்டு கேள்வி

469 0

பரோல் கேட்கும் வழக்கில் காணொலிக்காட்சி மூலம் வாதாட விருப்பமா? என நளினியிடம் கேட்டு தெரிவிக்கும்படி அவரது வக்கீலுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் நளினி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக நான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். இங்கிலாந்தில் வசிக்கும் என்னுடைய மகளுக்கு திருமணம் செய்வதற்காக எனக்கு 6 மாதம் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தது. அப்போது, நளினியை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த முடியாது’ என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்காத நீதிபதிகள், ‘நளினியை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதில் போலீசாருக்கு என்ன சிக்கல் உள்ளது?‘ என்று கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதும் நளினியை கோர்ட்டில் ஆஜர்படுத்த அரசு தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நளினி தரப்பில் ஆஜரான வக்கீலிடம், ‘பரோல் கேட்டு தொடரப்பட்டுள்ள இந்த மனுவுக்கு நளினி ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி தான் வாதாட வேண்டுமா? அல்லது அவர் விரும்பினால் காணொலிக்காட்சி மூலம் சிறையில் இருந்தபடியே அவர் வாதாடலாமே? எனவே, காணொலிக்காட்சி மூலம் வாதாட விருப்பமா? என்று நளினியிடம் கேட்டு சொல்லுங்கள்‘ என்று கூறிய நீதிபதிகள் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.