கனடாவில் டொரொன்டோ ரேப்டர்ஸ் அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சியில் நிகழ்ந்த துப்பாக்கியால் சூட்டில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
கனடாவில் அண்மையில் நடந்து முடிந்த தேசிய கூடைபந்து போட்டியில் ‘டொரொன்டோ ரேப்டர்ஸ்’ அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் பெற்றது. இதையொட்டி டொரொன்டோ ரேப்டர்ஸ் அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி டொரொன்டோவின் நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் நடைபெற்றது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். சதுக்கத்துக்கு வெளியே உள்ள சாலைகளில் சுமார் 10 லட்சம் பேர் ஒன்று கூடி தங்கள் நகரைச் சேர்ந்த அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடி களித்திருந்தனர்.
அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூட்டால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக கூட்டத்தினர் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய 3 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த பரபரப்பு காரணமாக பாராட்டு விழா இடையில் நிறுத்தப்பட்டு, நிலைமை சீரான பின்னர் மீண்டும் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.