சேலத்தில் தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை வினுப்ரியாவின் ஆபாச படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் இளம் பிள்ளையை அடுத்த இடங்கண சாலையை சேர்ந்தவர் அண்ணாதுரை. விசைத்தறி தொழில் செய்து வருகிறார்.
இவரது மனைவி மஞ்சு. இந்த தம்பதியின் மகள் வினுப்பிரியா (வயது21). பி.எஸ்.சி. படித்துள்ள இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி வினுப்பிரியாவின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் ஆபாசமாக பேஸ்புக்கில் பரவியது. இது குறித்து எஸ்.பி. அலுவலகத்தில் அண்ணாதுரை கொடுத்த புகாரின் பேரில் மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே கடந்த 26-ந்தேதி வினுப்பிரியாவின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படத்துடன் தொடர்புக்கு என அண்ணாதுரையின் செல்போன் எண்ணும் பேஸ்புக்கில் வெளியானது. இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த அண்ணாதுரை சங்ககிரி டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு 27-ந்தேதி புகார் கொடுக்க சென்றார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த வினுப்பிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். எந்த தப்பும் செய்யாத போதும் பெற்றோர் கூட நம்ப மறுப்பதால் உயிர் வாழ விருப்பம் இல்லை என அவர் எழுதி வைத்திருந்த கடிதமும் போலீசாரிடம் சிக்கியது.
பின்னர் வினுப்பிரியாவின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது. அப்போது வினுப்பிரியாவின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்றும், போலீசாரின் அலட்சியத்தால் தங்களது மகள் அநியாயமாக இறந்ததாகவும் புகார் கூறிய உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்தனர்.
2-வது நாளாக நேற்றும் உடலை வாங்க மறுத்த வினுப்பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டர் சம்பத்திடமும் இது தொடர்பாக பரபரப்பு புகாரையும் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியின் நுழைவு வாயிலில் அமர்ந்து வினுப்பிரியாவின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட எஸ்.பி. அமித்குமார் சிங் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது போலீசார் சரியாக விசாரிக்கவில்லை என்றும், புகார் கொடுக்க சென்றவரிடமே போன் வாங்கி கொடுக்கும் படி கட்டாயப்படுத்தியதும் நியாயமா? என்று கேள்வி எழுப்பினர். இந்த பிரச்சனையில் போலீசார் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். தவறு செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கிறேன்.
இறந்த வினுப்பிரியாவை எனது சொந்த தங்கையாக கருதி நானே விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்து உங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து காட்டுகிறேன் என்று உருக்கமாக பேசினார். இதையடுத்து வினுப்பிரியாவின் உறவினர்கள் சமாதானம் அடைந்தனர். பின்னர் அவரது உடலை வாங்கி சென்று சொந்த ஊரில் தகனம் செய்தனர்.
இதற்கிடையே போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார் சிங் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படைகளுடன் ஆலோசனை நடத்திய அமித்குமார்சிங் குற்றவாளிகளை கண்டுபிடிக்க பல ஆலோசனைகளையும் வழங்கினார்.
தனிப்படையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ஏர்செல் நிறுவன மொபைல் எண் மூலமே ஆபாச படம் பரப்பப்பட்டுள்ளதை கண்டு பிடித்தனர். பின்னர் இது தொடர்பான 6 பக்க ஐ.பி. எண்களை பெற்று முதன் முதலில் இந்த ஆபாச படங்களை பரப்பியவர் யார்? என்று கண்டு பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கினர்.
அப்போது இளம்பிள்ளை அருகே உள்ள கல்பாரப்பட்டியை சேர்ந்த சுரேஷ் (22) என்பவர் அந்த பேஸ்-புக் ஐ.டி.க்கு அதிக படங்களை அனுப்பியது தெரிய வந்தது. இன்று அதிகாலை அவரது வீட்டிற்கு சென்ற தனிப்படை போலீசார் சுரேசை பிடித்து மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு வைத்து விடிய விடிய தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், வினுப்பிரியாவின் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்டதை ஒப்புக்கொண்ட அவர் மேலும் பல திடுக்கிடும் தகவல்களையும் போலீசாரிடம் தெரிவித்தார். அதன் விவரம் வருமாறு:-
நானும், வினுப்பிரியாவும் காதலித்து வந்தோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வினுப்பிரியாவுக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நான் எவ்வளவோ? எடுத்துக்கூறியும் என்னை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அவரது வீட்டிற்கு சென்றும் நான் பெண் கேட்டேன், அப்போது அவரது பெற்றோர் சமதானப்படுத்தி என்னை அனுப்பி வைத்து விட்டனர்.
ஆனாலும் காதலி நமக்கு கிடைக்காமல் போய் விடுவாளோ? என்ற ஆத்திரம் எனக்கு ஏற்பட்டது. இதனால் அவரை பழி வாங்க திட்டமிட்டேன். அதன்படி வினுப்பிரியாவின் படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்டேன். பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டதால் வீட்டிலேயே முடங்கி இருந்தேன். ஆனாலும் போலீசார் விசாரித்து கண்டுபிடித்து விட்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுக்க சென்ற அண்ணதுரையிடம் வில் போன் வாங்கி தரும்படி கூறிய போலீஸ் ஏட்டு குறித்தும் துணை கமிஷனர் ராமகிருஷ்ணன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையில் வில் போன் வாங்கியது தெரிய வந்துள்ளதால் அந்த போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு செய்யப்படுவார் என தெரிகிறது.