புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள சமூர்த்தி பயனாளிகளிடமிருந்து தலா ஐநூறு ரூபா அறவிட்டு அத் தொகைக்குரிய காசோலையினை மாவட்டச் சமூர்த்தி பொது வைப்புக் கணக்கில் வரவு வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கிளிநொச்சியில் அனைத்து சமூர்த்தி வங்கி முகாமையாளர்களுக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தினை சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்டப் பணிப்பாளர் திருமதி ஆ.தவபாலன் அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில் சமூர்த்தி திணைக்களப் பணிப்பாளரின் சுற்றுநிருபத்திற்கு அமைய இந் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும், புதிய சமூர்த்தி பயனாளிகளின் உரித்து பத்திரம் இடும் உறைகள், மேடை தயாரித்தல் அலங்கரித்தல், கதிரைகள் மற்றும் ஏனைய உபரணங்கள், உபசரிப்புக்கள், நான்கு நடன குழுவிற்கான செலவுகள், புதிதாக சிந்திப்போம் ஊக்கத்தில் எழுவோம் எனும் தலைப்பிலான பிரச்சாரம் செய்தல், ரீ சேட்கள் போன்ற செலவுகளுக்கே இந்த நிதியை அறவிடுமாறும் பணிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புதிய சமூர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவுகள் இன்னமும் கிடைக்கப்பெறாத நிலையில் ஏற்கனவே வங்கியில் உள்ள நிதியிலிருந்து மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வங்கிகளும் தலா ஐநூறு ரூபா வீதம் எடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய சமூர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவு கிடைக்கின்ற போது அச் சந்தர்ப்பத்தில் அறவிடப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.
அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 13078 புதிய சமூர்த்தி பயனாளிகளும் 65,39000 ரூபா பணம் சமூர்த்தி வங்கிகளிடமிருந்து மாவட்ட சமூர்த்தி பொது வைப்புக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.