சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் அரசுக்கு கண்டனம் தெரிவித்து பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டம் திருப்பூர்-காங்கேயம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2-வது நாளாக கூட்டம் நடந்து முடிந்தது.
இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ், தேசிய செயலாளர் எச்.ராஜா, இல.கணேசன் எம்.பி., மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில செயலாளர் வானதி சீனிவாசன், பொருளாளர் சேகர், கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட தமிழகத்தில் இருந்து 350-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-* காஷ்மீர் மாநிலம் உரி பள்ளத்தாக்கில் ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் ஆதரவுடன் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நாட்டை காக்க உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறது.
* பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத பயிற்சி முகாம் மற்றும் பயங்கரவாதிகளை அழித்த இந்திய ராணுவத்துக்கும், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் பாராட்டுதலை தெரிவித்துக்கொள்வது.
* தமிழக பா.ஜனதா கட்சிக்கு 1991-ம் ஆண்டிலிருந்து பணியாற்றிக்கொண்டிருக்கும் இல.கணேசனை எம்.பி.யாக்கிய பிரதமர் நரேந்திரமோடிக்கும், தேசிய தலைவர் அமித் ஷாவுக்கும், மத்திய பிரதேச மாநில பா.ஜ.க. தலைமைக்கும், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வது. இல.கணேசனின் தேசப்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வது.
* கர்நாடக மாநிலம் தவணை முறைப்படி தமிழகத்துக்கு திறந்து விட வேண்டிய காவிரி நீரை, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் திறந்து விட மறுக்கிறது. எனவே கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தை இந்த செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. காவிரி நதியிலிருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீரை முறைப்படி தமிழகத்துக்கு பெற்றுத்தரவும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், தமிழக பா.ஜனதா கட்சி அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அதே வேளையில் காவிரி பிரச்சினையை காரணம் காட்டி தமிழகத்தில் உள்ள பிரிவினை சக்திகள், மொழி மற்றும் பிராந்திய உணர்வுகளை தூண்டிவிட்டு நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதை இந்த செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
* சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பரிபூரண குணமடைய இந்த செயற்குழு இறைவனை பிரார்த்திக்கிறது.மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.