காவிரி பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடியை தி.மு.க எம்.பி.க்கள் விரைவில் சந்திப்பார்கள் என்று கனிமொழி எம்.பி. பேட்டியளித்துள்ளார்.
தி.மு.க எம்.பி. கனிமொழி டெல்லி செல்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
காவிரி பிரச்சனையில் தி.மு.க சார்பாக ரெயில் மறியல்கள் நேற்று நடத்தப்பட்டது. இன்னும் இந்த பிரச்சனைகள் குறித்து அடுத்த கட்டமாக எடுத்துச் செல்ல பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். வருகிற திங்கட்கிழமைக்குள் நேரம் ஒதுக்குவது குறித்து சொல்வதாக கூறி உள்ளார்கள். நேரம் கொடுத்தால் பிரதமரிடம் காவிரி பிரச்சனை குறித்து விவரமாக எடுத்து சொல்வோம்.
திருப்பரங்குன்றம், தஞ்சை அரவக்குறிச்சி 3 தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தி.மு.க போட்டியிட்டு கண்டிப்பாக வெற்றியை பெறுவோம். நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தல் நடக்க வேண்டும். அப்படி நடக்க தி.மு.க எல்லா முயற்சிகளையும் எடுக்கும்.
நாடாளுமன்றத்தில் காவிரி பிரச்சனை குறித்து தமிழகத்தில் உள்ள அத்தனை எம்.பி.க்களும் பேச வேண்டும். இதை தி.மு.க முக்கியமான பிரச்சனையாக எடுத்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் பேசுவோம்.
காவிரி பிரச்சனையில் உயர் தொழில் நுட்பகுழு நேற்று தனது அறிக்கையை கொடுத்துள்ளது. அந்தகுழு தமிழகத்தில் அதிக நேரம் செலவழித்து பார்வையிடவில்லை. தமிழகத்தில் உள்ள பிரச்சனைகள் பற்றி விரிவாக அந்த அறிக்கையில் சொல்லப்படவில்லை. காவிரி பிரச்சனைக்காக நடந்துள்ள தற்கொலைகளை கூட அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
அவர்களது அறிக்கையில் முழுமையாக எதுவும் சொல்லப்படவில்லை. ஆனாலும் நீதிமன்றம் என்ன சொல்கிறது என்பது தான் முக்கியம்.காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயமாக அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.