அமெரிக்க படைகள் இலங்கைக்கு வராது என்பதற்கு தன்னால் உத்தரவாதம் கொடுக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நாட்டின் தற்போதைய அச்ச சூழ்நிலையில் நிலைமைகளை கையாள்வதற்காக அமெரிக்க படைகள் இலங்கைக்கு வருவதற்கான சத்திக்கூறுகள் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எவ்வாறாயினும் அவ்வாறு அமெரிக்க படைகள் இலங்கைக்கு வரும் என்று தான் நம்பவில்லை என்றும் பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் மேற்கொள்ளப்படவிருக்கின்ற சோபா உடன்படிக்கை கைச்சாத்திடப்படுமாக இருந்தால் அமெரிக்க படைகள் சுதந்திரமாக இலங்கையை பயன்படுத்த முடியும் என்ற அச்சம் நிலவி வருகின்ற சூழ்நிலையிலேயே பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் குறித்த வினா தொடுக்கப்பட்டது.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், “தற்போது பேசப்பட்டு வருகின்ற சர்ச்சைக்குரிய சோபா ஒப்பந்தம் தொடர்பாக நாங்கள் படித்து பகுப்பாய்வு செய்துள்ளோம். சில பிரிவுகள் குறித்து சம்பந்தப்பட்ட அமெரிக்க அதிகாரிகளுக்கு எமது கருத்தினை தெரிவித்துள்ளோம்.
குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முன்னர் இது அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும். எவ்வாறாயினும் நாட்டின் நலன்களுக்காகவே இந்த ஒப்பந்தம் கொண்டுவர திட்டமிடப்படுகின்றது. அது நாட்டினதும் பிராந்தியத்தினதும் ஒருமைப்பாட்டிற்கு எந்தவிதமான அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தாது என்பதை உறுதியாக கூறமுடியும்.
எமது இராணுவம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்திவருகின்றது. எனவே இலங்கைக்கு வெளிநாட்டுப் படைகள் தேவையில்லை. இதுபோன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதில் இலங்கை மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்.” என கூறினார்.
இதேவேளை அமெரிக்கா முன்மொழிந்துள்ள ‘சோபா’ உடன்பாட்டின் சர்ச்சைக்குரிய பிரிவுகள் தொடர்பாக, எதிர்வரும் 27ஆம் திகதி கொழும்புக்கு விஜயம் செய்யும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவுடன் பேச்சு நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவுடன் ‘சோபா’ உடன்பாட்டைச் செய்துகொள்வதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன நிலையில் இந்த விடயம் தொடர்பாக பேச்சுக்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.