கிளிநொச்சியில் வைத்துக் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட வர்த்தகர், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்றுத் திங்கட்கிழமை (17) சரணடைந்துள்ளார்.
“வரணி, இடைக்குறிஞ்சியைச் சேர்ந்த கி.ரதீஷன், என்ற 35 வயதுடைய மேற்படி வர்த்தகர், கடந்த 12ஆம் திகதியன்று, கிளிநொச்சியிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து காணாமற்போனார்” என, அவரது மனைவியால், பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும், அவர் கடத்தப்படவில்லை, தலைமறைவாகி உள்ளார் என்று கூறி, கடந்த 15ஆம் திகதியிலிருந்து நேற்று வரையில், 6 வர்த்தகர்கள், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
தாங்கள் அறுவரும், 100 மில்லியன் ரூபாய் பணத்தை, அவருக்குக் கடனாக வழங்கியதாகவும் அதற்கு அவர், காசோலை தந்ததாகவும், ஆனால், அந்தக் காசோலைகள், வங்கியால் மறுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வர்த்தகர்கள், தங்களது முறைப்பாடுகளில் தெரிவித்துள்ளனர்.
மேற்படி வர்த்தகர் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட தருணத்திலிருந்து, அவருடைய அலைபேசி செயலிழந்துள்ளதாகவும், அவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ள வர்த்தகர்கள், தங்கள் முறைப்பாட்டில் கூறியுள்ளனர்.
இந்நிலையில், மேற்படி வர்த்தகர், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று சரணடைந்துள்ளார். அவரை, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், ஆஜர்ப்படுத்தும் நடவடிக்கையை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.