‘சுயாதீன ஆணைக்குழுக்களை முடக்கும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை’

300 0

mahintha-samarasinka-244x300சுயாதீன ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தவோ அல்லது அதனை இல்லாமல் செய்து விடுவதற்கோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எந்தவொரு எண்ணமும் கிடையாது என்று, அமைச்சர் மஹிந்த சமரசிங்க, நேற்றுத் திங்கட்கிழமை (17) தெரிவித்தார்.

அரசியல் செயற்பாடுகளுக்கு ஏற்றாற்போல், சுயாதீன ஆணைக்குழு செயற்பாடுமாயின், அது தொடர்பில் தான் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, கடந்த புதன்கிழமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பில், கூறும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த அவர், “நாட்டை பாதுகாப்பதற்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த போர் வீரர்களைப் பாதுகாப்பதே, ஜனாதிபதியின் எண்ணமாகும். அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் கட்சிகளுக்கு திருப்தியளிப்பதற்காக, ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட கருத்தை பல்வேறு அரசியல் கட்சிகள் உண்மை சிதைக்கும் அளவுக்கு கதைகளை கூறினர். இது குறித்து சில ஊடகங்களும் தவறான கருத்தை வெளியிட்டிருந்தது” என்று தெரிவித்தார்.

“பொருளாதாரத்தை நிலைப்படுத்தி, அரசியல், சமூகம் ஆகியவற்றை நிலைநாட்டி நாட்டில் ஜனநாயகத்தை நிலை நாட்ட வேண்டும என்பதே, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரது எண்ணமாகும். மேலும், குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆகியோருக்கு எதிராக தான் நடவடிக்கை எடுக்கப்போவதாக ஜனாதிபதி கூறியமை, குறும்பாக கூறியவையாகும்” என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.