ஈஸ்டர் தாக்குதலைப்போன்று துரதிஸ்டவசமான சம்பவம், இனியும் இலங்கை மண்ணில் இடம்பெறக்கூடாது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு இன்று (சனிக்கிழமை) காலை விஜயம் மேற்கொண்டபோது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “சீயோன் தேவாலயத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமையை இட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
நாம் இந்த தேவாலயத்தில் இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த உறவுகளுக்கு கவலையைத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளோம்.
அவர்களுக்கு எப்போதும் நாம் துணை நிற்போம் என்ற செய்தியையும் இவ்வேளையில் கூறிக்கொள்கிறேன்.
மேலும், ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற அந்த துரதிஸ்டவசமான சம்பவம், இனியும் இலங்கை மண்ணில் இடம்பெறக்கூடாது என்று நாம் பிராத்திக்கிறோம்.
அனைத்து மக்களும் சுய கௌரவத்தோடும், உரிமையோடும் வாழும் நிலைமை ஏற்பட வேண்டும் என்பதே எமது பிராத்தனையாகும்” என மேலும் தெரிவித்தார்.