ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது இன்று பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபர் ரவுகானியை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ரத்தானது.
கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று மாலை கிர்கிஸ்தான் நாட்டு அரசின் சார்பில் முப்படையினரின் அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கிர்கிஸ்தான் அதிபர் சூரன்பே ஜீன்பெக்கோவ் தலைமையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர் இந்தியா-கிர்கிஸ்தான் தொழிலதிபர்கள் கருத்தரங்கில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
இதற்கிடையில், ஈரான் அதிபர் ஹசன் ரவுகானியை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இந்திய வெளியுறவுத்துறையின் சார்பில் முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், இந்த நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு விருந்து நிகழ்ச்சியை குறிப்பிட்ட நேரத்தில் நடத்த முடியாமல் போனதால் ஏற்பட்ட தாமதத்தின் விளைவாக ஈரான் அதிபர் ரவுகானியுடன் பிரதமர் மோடியின் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.