இந்து மக்கள் விரும்பாவிட்டால் புத்தர் சிலையை நாமே அகற்றுவோம் – அதுரலிய தேரர்

508 0

இந்து ஆலயங்களில் புத்தர் சிலை வைப்பதை தமிழ் மக்கள் விரும்பாவிட்டால் அதற்காக நீதிமன்றமோ, பொலிஸ் நிலையமோ செல்லவேண்டியதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்னதேரர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான சூழலில் புத்தர் சிலையை தாங்களே அகற்றுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்து பௌத்த கலாசார பேரவையில் 2ஆம் மொழி கல்வியை நிறைவு செய்த மாணவா்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று  இலங்கை வேந்தன் கலைக் கல்லுாாியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்களுக்கு சிங்களம் கற்பிக்கப்படுகிறது. அதேபோல் கொழும்பில் சிங்கள மாணவா்களுக்கு தமிழ் கற்பிக்கப்படவேண்டும். அதற்கான பொறுப்பு இந்த பேரவைக்கு உள்ளது.

மேலும் இந்து சமயத்திற்கும் பௌத்த சமயத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இங்கே இந்து ஆலயங்களில் புத்தர் சிலைகள் வைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது. உண்மையில் மக்கள் விரும்பாவிட்டால் அதனை நாங்கள் செய்யமாட்டோம். அதற்காக நீதிமன்றம் செல்லத் தேவையில்லை.

இந்து பௌத்த சமயங்களின் செய்தி அன்பு மட்டுமேயாகும். தலதா மாளிகை தாக்கப்பட்டபோது இந்து கோவில்களை பௌத்தர்கள் தாக்கவில்லை. 83 கலவரம் நடைபெற்ற காலத்திலும் கூட இந்துக் கோவில்களை தாக்கவில்லை. தாக்கவேண்டும் என நாங்கள் நினைக்கவுமில்லை.

இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் பலமான அமைப்பை உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.