உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு பின்னரான காலப் குதியில் வெசாக்தின கொண்டாட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது பொஷன் போயா தினத்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதற்கமைய பொஷன் போயா தின கொண்டாட்டங்களை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதற்காக 4227 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
அநுராதபுரம் – மிஹிந்தலை பகுதிகளில் 10 சேவை இடங்கள் ஒதுக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அந்த சேவை இடங்களுக்கு பொறுப்பாக உதவி பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதிகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 2735 பொலிசார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பொலிஸ் போக்குவரத்து அதிகாரிகள் 1096 பேரும், சிவில் உடையில் 246 பேரும் பொலிஸ் உயிர்காப்பு சங்க உத்தியோகத்தர்கள் 150 பேர் உள்ளடங்கலாக 4227 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பொலிஸ் தொலைபேசிசேவை, போக்குவரத்து சேவை, மோட்டார் சைக்கிள் பிரிவினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மோப்பநாய் சோதனைகள் என்பனவும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த பாதுகாப்பு நடவடிக்கையில் பொலிசாரும் இராணுவத்தினரும் சிவில் அதிகாரிகளும் ஈடுபடவுள்ளனர்.
வாகன போக்குவரத்து நடவடிக்கைகளை ஒழுங்கு படுத்துவதற்காக போக்குவரத்து அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதற்கமைய வாகனங்களை தரித்து வைப்பதற்காக அநுராதபுரத்தில் 20 இடங்களும், மிஹிந்தலையில் 6 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் ஆபத்தான இடங்களில் நீராடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுவதுடன், பக்தர்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் வரலாற்று இடங்களுக்கு சேதம் ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.