பிணைமுறி ஊழல் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்-சுனில்

346 0

மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குற்றத்திற்கும்  ஆட்சியாளர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது. மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்துவதை போலவே இதனுடன் தொடர்புபட்ட அரசியல்வாதிகளையும் நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.

மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குற்றவாளிகளை பட்டியல்படுத்தினால் முதல் பெயராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்.

மத்திய வங்கி ஊழல் விடயத்தில் உண்மைகளை வெளிக்கொண்டுவர மக்கள் விடுதலை முன்னணி பல முயற்சிகளை சகல விதத்திலும் எடுத்தது.இன்றும் நாம் இதனை கைவிடவில்லை. முதலில் இந்த ஊழல் குறித்து நாம் வெளிப்படுத்தி ஊடகங்கள் முன்னிலையில் கருத்துக்களை முன்வைத்து, இதனை ஆராய வேண்டும் என நீதிமன்றம் வரை நாடி எமது சகல நடவடிக்கைகளையும் எடுத்தோம்.

மத்திய வங்கி ஆளுநர் மற்றும் அவரது மருமகன் இருவரும் தொடர்பு பட்டிருந்தனர்.ஆகவே இவர்கள் தலையீடுகள் இல்லாது விசாரணைகளை முன்னெடுக்க மத்திய வங்கி ஆளுநர் பதவி விலக வேண்டும் என்பதை தெரிவித்தோம். நான் கோப் குழு தலைவர் என்ற ரீதியில் இது குறித்த விசாரணை  ஒன்றும் நடத்தி அந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிட்டேன்.

அதி தவிர்ந்து ஜனாதிபதி தனியாக விசாரணை ஆணைக்குழு ஒன்றினை நியமித்தார். ஆணைக்குழு அறிக்கை உள்ளது. இவை அனைத்தும் ஒரு கணக்கு வழக்கு தொடர்பில் மட்டுமே முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளாகும்.  இந்த குற்றங்களில் அர்ஜுன் மகேந்திரனை நீதிமன்றத்தின் முன்னிலையில் கொண்டுவர வேண்டும்.

இன்றுவரை அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு கொண்டுவந்து நீதிமன்றம் முன்னிலையில் நிறுத்த முடியாதுள்ளது என்றால் அது இந்த பாரிய ஊழலுடன் தொடர்பு பட்ட அரசியல் நெருக்கமே காரணமாகும். இதில் பிரதான குற்றவாளி மட்டும் அல்ல அதனுடன் தொடர்புபட்ட அரசியல் வாதிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டுமென அவர் இதன்போது தெரிவித்தார்.