எண்ணெய் கப்பல்கள் தாக்குதல் எதிரொலி – பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!

333 0

ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலையடுத்து பெட்ரோலிய பொருட்களின் விலை சர்வதேச அளவில் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவுக்கும், ஈரானுக்கும் இடையே நீண்ட காலமாக பகைமை நிலவி வருகிறது.

சவுதி அரேபியாவின் நட்பு நாடாக அமெரிக்கா உள்ளது. கடந்த மே 12-ந்தேதி, ஈரான், நாட்டின் கடற்கரையை ஒட்டிய ஓமன் வளைகுடாவில் சென்ற 4 எண்ணெய் கப்பல்கள் மீது லேசான வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் பெரிய அளவில் அந்த கப்பல்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

ஆனால் சவுதி அரேபியா- ஈரான்-அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டது. தாக்குதலுக்கு உள்ளான 4 கப்பல்களில் 2 சவுதி அரேபியாவுக்கு சொந்தமானது என்பதால் அமெரிக்கா இந்த விவகாரத்தை கையில் எடுத்து ஈரானை மிரட்டியது. இதனால் ஓமன் வளைகுடா பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று ஓமன் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த நார்வே நாட்டை சேர்ந்த ‘பிரன்ட் அல்டைர்’ கப்பல் மற்றும் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த ஜப்பானியர் ஒருவருக்கு சொந்தமான ‘கோகுகாகரேஜியஸ்’ என்ற கப்பல் மீதும் கண்ணி வெடி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் இரு கப்பல்களிலும் தீப்பிடித்து அதில் இருந்த பல கோடி லிட்டர் பெட்ரோலிய பொருட்கள் எரிந்தன. அதனால் ஏற்பட்ட புகை விண்ணைத்தொட்டது.

கப்பல்களில் தீப்பிடித்ததைத் தொடர்ந்து அதில் இருந்து 44 சிப்பந்திகள் கடலில் குதித்து மிதந்து கொண்டிருந்தனர். தகவல் அறிந்த ஈரான் ராணுவம் அங்கு விரைந்து சென்று சிப்பந்திகளை பத்திரமாக மீட்டது. இந்த தாக்குதலில் கப்பல்கள் மூழ்கவில்லை.

இந்த தாக்குதலுக்கு ஈரான் நாட்டு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாப் பியோ குற்றம் சாட்டி உள்ளார்.

கடந்த மாதம் இதே பகுதியில் சவுதி அரேபியா கப்பல் உள்பட 4 கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் மீண்டும் அதே பகுதியில் 2 எண்ணெய் கப்பல்கள் குறிவைத்து தாக்கப்பட்டது சர்வதேச நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலையடுத்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகில் அதிக பெட்ரோலிய பொருட்கள் பயணிக்கும் அரபிக்கடலின் ஓமன் வளைகுடா பகுதியில் நடைபெற்ற இத்தாக்குதலில் அந்த கடல் வழித்தடத்தில் பயணிக்கும் எண்ணெய் கப்பல்களுக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.

இதனால் கப்பல் போக்குவரத்து ஸ்தம்பித்து பெட்ரோலிய பொருட்களின் விலை சர்வதேச அளவில் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து தங்களுக்கு செய்தி வந்துள்ளதாகவும், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தேகத்துக்குரிய தாக்குதல் குறித்து பிராத்திய பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஈரான் அழைப்பு விடுத்துள்ளது.