பாராளுமன்ற தேர்தல் தோல்வியால் உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக தயக்கம் காட்டுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பெரம்பலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடக் கூடாது. உடனடியாக நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
இருப்பினும் பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால், அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த தயக்கம் காட்டுகிறது. இந்த தேர்தலுக்கான தேதியை அரசு விரைவில் அறிவிக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சியில் தலித் மக்களுக்கான தலைவர் பதவியை தனி ஒதுக்கீடாக அறிவிக்க வேண்டும். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை உடனடியாக கூட்டி ஹைட்ரோ கார்பன் திட்டம், புதிய கல்வி கொள்கை ஆகியவற்றை எதிர்த்து போராடுவதற்கான கலந்தாய்வு கூட்டத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்த வேண்டும்.
வருகிற ஜூலை 14-ந்தேதி சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. விருது பெறுவோர் பட்டியல் விரைவில் தேர்வு செய்து அறிவிக்கப்படும்.
அ.தி.மு.க. கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள ஒற்றைத் தலைமை என்பது உட்கட்சி பிரச்சினை. ஆனாலும் இரட்டை தலைமையை தவிர்த்து ஒற்றை தலைமை தான் தேவை என்று கருதுகிறேன்.
தமிழகத்தில் 12 லட்சம் ஏக்கருக்கு மேல் பஞ்சமி நிலம் உள்ளது. இதை கண்டறிந்து தலித் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்காக ஏற்கனவே அமைக்கப்பட்ட மருதமுத்து ஆணையத்தை மீண்டும் செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். கூடங்குளம் அணு உலை வளாகத்துக்குள் அணுக்கரு மையத்தை உருவாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது மிகவும் ஆபத்தானது. விதிமுறைக்கு எதிரானது.
இது குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் வருகிற ஜூலை 9-ந்தேதி நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.