பாராளுமன்ற தெரிவு குழுவின் செயற்பாடுகள் ஈஸ்டர் குண்டுதாக்குல் தொடர்பில் ஆராயும் நோக்கத்திற்கு அப்பாற்பட்டு அரசியல் நோக்கங்களை கொண்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இதன் காரணமாகவே ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் இடையே பாரிய கருத்து வேறுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலைமை தொடருமாயின் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படும்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தற்போது அரசியலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு பாராளுமன்ற தெரிவு குழுவே பிரதான காரணியாக உள்ளது. குண்டு தாக்குதல் தொடர்பில் ஆராயும் தெரிவு குழுவின் செயற்பாடுகள் அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் உள்நோக்கத்தை கொண்டதாக காணப்படுகின்றது.
ஜனாதிபதியின் மீதே அனைத்து குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளமையின் விளைவால் நிறைவேற்றுத்துறைக்கும் சட்டவாக்கத்திற்கும் இடையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதியும் நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக பிரயோகிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
குண்டு தாக்குதலில் பெரும்பாலான தமிழ் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
நிறைவேறாத புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திலே கூட்டமைப்பு முழுமையாக தங்கியுள்ளது. அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் பயனற்றது. மக்களின் வரிப்பணமே வீணடிக்கப்பட்டுள்ளது என அவர் இதன் போது தெரிவித்தார்.
நிறைவேற்றுத்துறைக்கும் சட்டத்துறைக்கும் இடையில் தற்போது காணப்படுகின்ற முரன்பாடுகள் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல இடமளிக்க முடியாது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் இவ்வாரம் பொதுஜன பெரமுனவின் முக்கிய தரப்பினர்கள் அரசாங்க தரப்புடன் ஒரு சந்திப்பினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். என்றார்.