ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெற வேண்டும்-மஹிந்தானந்த

446 0

தேசிய பாதுகாப்பினை சவாலுக்குட்படுத்தியே இன்று அனைத்து பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன. எனவே தேசிய பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டுமாயின் ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இன்று தேசிய பாதுகாப்பினை  அடிப்படையாக கொண்டே அனைத்து பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியே தேசிய பாதுகாப்பிற்கு  பொறுப்பு  கூற வேண்டும். தேசிய பாதுகாப்பு பலவீனமடையும் விதத்தில்  செயற்பட்ட ஜனாதிபதியும் பிரதமரும் ஒருபோதும் தப்பிக்க முடியாது.

இன்றைய நிலையில் ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெற வேண்டும்.  பலம் வாய்ந்த  ஒரு தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும். நெருக்கடிகளுக்கு மத்தியில் பொதுத்தேர்தல்  இடம் பெற்றால் அடிப்படைவாதிகளின் ஆதரவுடன் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியின் பலவீனமான அரசாங்கமே ஆட்சியமைக்கும்.  இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. ஜனாதிபதி தேர்தலின் ஊடாகவே அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

அத்துடன் நாட்டில்  முழுமையாக இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க முஸ்லிம் அரசியல்வாதிகள்  அனைத்து ஒத்துழைப்பினையும் வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.