வடபழனி முருகன் கோவிலில் செல்போனில் பேச தடை- அறநிலையத்துறை முடிவு

352 0

சென்னை வடபழனி முருகன் கோவில் வளாகத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

வடபழனி முருகன் கோவில் வளாகத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

புகழ் பெற்ற இந்த கோவிலுக்கு திங்கள், புதன், வியாழக்கிழமைகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். வெள்ளிக்கிழமை மற்றும் வார இறுதி நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை இருமடங்கு அதிகமாக உள்ளது.

கோவிலுக்கு வரும் சிலர் வளாகத்தில் நின்று செல்போனில் ‘செல்பி’ புகைப்படங்கள் எடுக்கின்றனர். சிலர் சன்னதி அருகிலேயே செல்போனில் பேசுகின்றனர். இது பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது.

எனவே கோவிலில் அமைதியை கடைபிடிக்கவும், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கவும், செல்போன் பயன்படுத்த தடை விதிக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை கேட்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

செல்போனுக்கு தடை விதித்தால் கோவிலுக்கு வருபவர்களின் செல்போனை வாங்கி வைக்க ஒரு மையம் அமைக்க வேண்டும். அந்த இடம் பக்தர்களுக்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதால் இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர ஆலோசனை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோவிலில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. மாநிலத்திலேயே முதல் நடவடிக்கையாக அங்குதான் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது வடபழனி கோவிலிலும் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலிலும் செல்போனுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளனர்.

அதே நேரம் மயிலாப்பூர் கபாலீஷ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலில் இது போன்ற எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து கேட்டபோது, கோவிலில் செல்போன் பயன்படுத்துவது தொடர்பாக அறநிலையத்துறை எந்த கொள்கையும் எடுக்கவில்லை. எனவே இங்கு செல்போனுக்கு தடை இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.