உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொண்ட தற்கொலை குண்டுத்தாரிகள் பயன்படுத்திய அனைத்து இலத்திரனியல் உபகரணங்களும் மேலதிக விசாரணைக்காக அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இலங்கையில் புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்க FBI அதிகாரிகளினால் இவை கொண்டு செல்லப்பட்டுள்ளன.
முழுமையான விசாரணை மேற்கொண்டு அதற்கான தகவல்களை இலங்கைக்கு வழங்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மையில் இலங்கைக்கு வந்த இந்தியாவின் முதன்மை புலனாய்வு பிரிவான தேசிய விசாரணை நிறுவனம், இலங்கை புலனாய்வு பிரிவிடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகள் தொடர்பில் சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
இன்சாப் இப்ராஹிம் மற்றும் இல்ஹாம் இப்ராஹிம் ஆகிய தற்கொலைதாரிகள் இருவருடனும் நெருக்கமாக செயற்பட்ட இந்தியர்களின் தொலைபேசி அறிக்கைகளே வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள அடில் அமிஸ் உடன் தொடர்பு வைத்திருந்த இந்தியர்கள் மூவரின் தகவல்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.