கண்ணீர் சிந்தி வரைந்த ஓவியத்தோடு தன் வரைதலுக்கு விடைகொடுத்து அனைவரையும் கண்ணீரால் உறையவைத்துள்ளான் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் சி.விதுசன்.
இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்த வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் நேற்று (10.6) மாலை மரணத்தை தழுவினார்.
பல்வேறு திறமைகளை தன்னகத்தே கொண்டு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் தரம் 6 இல் கல்வி கற்றுவந்த சிவனேசன் விதுசனே இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இவருக்கு இலங்கையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேலதிக சிகிச்சை அளிப்பதற்காக இந்தியாவிற்கு கொண்டு செல்லப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் பலரும் முன்வந்து நிதியுதவி அளித்து அவரை இந்தியாவிற்கு சிகிச்சைக்காக அனுப்பியிருந்தனர்.
சில நாட்களாக இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்த விதுசன் நேற்றைய தினம் சிகிச்சைகள் பலனின்றி இந்தியாவில் காலமானார்.
சிகிச்சைக்காக 75 இலட்சம் ரூபா தேவைப்படுவதாக முகநூல்களிலும் ஊடகங்களின் வாயிலாகவும் பெற்றோரால் விடப்பட்ட கோரிக்கைக்கமைய வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் லண்டன் பழைய மாணவர்களால் சுமார் 16 இலட்சம் ரூபா உட்பட பல உபகாரிகளால் பணத்தினை வழங்கி சிறுவனின் உயிரைக்காக்க உதவியிருந்தனர்.
இவ்வாறு விதுசனின் உயிரைக்காக்க வேண்டுமென தம்மாலான உதவிகளை வழங்கியிருந்தவர்களுக்கு பெற்றோர் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் விதுசன் மீள் சுகதேகியாக வருவான் என எதிர்பார்த்த பலரும் இன்று அவனது இழப்பை தாங்கமுடியாது கவலையடைந்துள்ளனர்.