ஆப்கானிஸ்தானில் தொடரும் மோதல்- 21 தலிபான்கள் உயிரிழப்பு

358 0

ஆப்கானிஸ்தானில் உருஸ்கான் மற்றும் காந்தகார் மாகாணங்களில் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 21 தலிபான்கள் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள், அரசுப் படைகளுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு படைகளுக்கு உளவு பார்ப்பதாக கூறி பொதுமக்களையும் சிறைப்பிடித்து துன்புறுத்துகின்றனர். தலிபான்கள் வசம் உள்ள பகுதிகளை மீட்க ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
அவ்வகையில் உருஸ்கான் மாகாணம் சார்சினோ மாவட்டம் மற்றும் திரின் காட் புறநகர்ப்பகுதிகளில் தலிபான்களின் மறைவிடங்கள் மீது, அரசுப் படையினர் விமான தாக்குதல் நடத்தினர். இதில், 14 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் இருந்து தலிபான்கன் பயன்படுத்திய ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளது. ஆனால் இந்த தாக்குதல் குறித்து தலிபான் தரப்பில் எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையே தலிபான்களின் முன்னாள் கோட்டையான காந்தகார் மாகாணத்தின், ஷார்கி துராகி பகுதியில் பாதுகாப்பு படையிருக்கும், தலிபான்களுக்கும் இடையே நேற்று இரவு கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 16 பேர் காயமடைந்தனர்.