கஜகஸ்தானில் புதிய அதிபர் ஆகிறார் டோகயேவ்- எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டம்

332 0

கஜகஸ்தானில் நடந்த அதிபர் தேர்தலில் இடைக்கால அதிபரான காசிம் ஜோமார்ட் டோகயேவ் வெற்றி பெறும் சூழ்நிலை உள்ளதால், எதிர்க்கட்சியினர் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கஜகஸ்தான் நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக அதிபராக பதவியில் இருந்த நூர்சுல்தான் நஜர்பயேவ் கடந்த மார்ச் மாதம் பதவி விலகினார். அத்துடன் இடைக்கால அதிபராக காசிம் ஜோமார்ட் டோகயேவை நியமித்தார். இதையடுத்து புதிய அதிபரை தேர்ந்து எடுப்பதற்காக நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 7 பேர் போட்டியிட்டனர். நூர்சுல்தான் நஜர்பயேவ் பங்கேற்கவில்லை. அவரது ஆதரவு பெற்ற ஜோமார்ட் டோகயேவ் (66) மற்றும் அமிர்ஷான் கொசனோவ் ஆகியோருக்கிடையே நேரடி போட்டி இருந்தது.

இந்நிலையில் நேற்று வாக்குப்பதிவு முடிவடைந்ததும், நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் ஜோமார்ட் டோகயேவுக்கு சாதகமாக இருந்தன. அவர் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அதிபர் ஆவார் என்றும், அமிர்ஷான் கொசனோவ் 15 சதவீத வாக்குகள் மட்டுமே பெறுவார் என்றும் கருத்துக்கணிப்பு தெரிவித்தது. தேர்தல் முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்பு நடத்திய இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடக்கவில்லை என்றும், எதிர்க்கட்சிகள் ஒடுக்கப்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். போலீசார் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அனுமதியின்றி ஆங்காங்கே பேரணிகள் நடைபெற்றன. இதனால் தலைநகர் நூர்சுல்தான், மிகப்பெரிய நகரமான அலமாட்டி ஆகிய இடங்களில் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் பதற்றமான சூழல் உருவானது.

போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர். அமைதியான வழியில் போராட்டம் நடத்தியவர்கள் மற்றும் சில பத்திரிகையாளர்களும் கைது செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 500 பேரை கைது  செய்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.