கடற்படையின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு முன்னெடுத்த விசேட சோதணை நடவடிக்கையின் போது மௌலவியொருவர் உட்பட ஆறு பேர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்பிட்டி , புத்தளம் மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் கடற்படையின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டிருந்தது. இதன் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய கல்பிட்டி – மண்டலகுடா பகுதியில் 35 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கையடக்க தொலைபேசிகள் மூன்றும் , அவர்கள் பயணித்த வேன் என்பன கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்கள் மன்னார் மற்றும் மண்டலகுடா ஆகிய பகுதிகளை சேர்ந்த 45 மற்றும் 39 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புத்தளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட மௌலவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மௌலவி 40 வயதுடைய , ரசல் நகர் – மாவில்லு – பாலவி என்ற இடத்தில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஏற்கனவே புத்தளம் பகுதியில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமையவே குறித்த மௌலவி கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 198 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
மேலும் , மன்னார் – உப்புக்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 2.9 கிராம் ஹெரொயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் பள்ளிமுனை , உப்புக்குளம் மற்றும் மன்னார் பகுதிகளை சேர்ந்த 42, 30, 22 வயதுடையவர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.