இஸ்லாமிய அடிப்படைவாத பிரச்சினைகளுக்கு பௌத்த பிக்குகளினால் தீர்வு காணமுடியும் – ஞானசார தேரர்

275 0

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அடியொட்டி நாட்டில்  தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு பௌத்த பிக்குகளினால் தீர்வை முன்வைக்க முடியும்.

தமது அரசியல் தேவைகளை  நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசியல்வாதிகள் நெருக்கடிகளை தீவிரப்படுத்தாமல்  விலகிக் கொள்வது  பொருத்தமாக அமையும் . அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளுநர்களான   அசாத்சாலி,  ஹிஸ்புல்லா ஆகியோர் பதவி விலகியமை பிரச்சினைகளுக்கு  தீர்வை பெற்றுத்தராது என  பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர்   கலகொட அத்தே  ஞானசார தேரர் தெரிவித்தார்.

பொதுபல சேனா அமைப்பின் தலைமை  காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

ஏப்ரல் 21ம் திகதி  அடிப்படைவாதிகளினால்  நடத்தப்பட்ட  தாக்குதலை தொடர்ந்து   இனங்களுக்கிடையிலான  தேசிய  நல்லிணக்கமே  சீர்குலைந்துள்ளது. இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிளவினை  சரி செய்வதற்கு அரசியல் வாதிகள்  எவ்வித  உரிய  நடவடிக்கைகளையும்  மேற்கொள்ளவில்லை, மாறாக தேவையற்ற கருத்துக்களை குறிப்பிட்டு பிரச்சினைகளை தீவிரப்படுத்தியுள்ளார்கள்.

விடுதலை புலிகள் அமைப்பினை விட  கொடிய போக்கினையே இஸ்லாமிய  அடிப்படைவாதம் கொண்டுள்ளது. விடுதலை  புலிகள்  ஒரு  கோரிக்கையினை முன்வைத்து  போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

இவர்களின் போராட்டம் வலு பெறுவதற்கு அப்போதைய அரசாங்கமும் ஒரு காரணியாக அமைந்தது.அரசியல் கொள்கையினை  கொண்டமையினால் விடுதலை புலிகளின் கோரிக்கை அரசியல் மட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்வினை காண வழிமுறைகள் வகுக்கப்பட்டன.

இஸ்லாமிய அடிப்படைவாதம் விடுதலை புலிகள் அமைப்பினை காட்டிலும் அப்பாற்பட்டது. மதத்தை அடிப்படைவாதமாக கொண்ட போராட்டத்திற்கு மத ரீதியிலே தீர்வை காண முடியும். இஸ்லாமிய  அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்கும்  வல்லமை  பௌத்த பிக்குமார்களிடம் காணப்படுகின்றது.

இவ்விடயத்தில் அரசியல்வாதிகளின் தஙகளின் அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்காமல் விலகிக் கொள்ள வேண்டும்.

தற்போது   அரசியல்வாதிகள் செயற்படும் விதம் ஒரு பிரச்சினைகளை திசை திருப்பி விடுகின்றார்கள்.தங்களின் தனிப்பட்ட கொள்கைகளை   குறிப்பிடுவதனால் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க முடியாது. இவ்விடயத்தில்  ஜனாதிபதி,பிரதமர்,எதிர்க்கட்சி தலைவர்  முறையான  ஒரு தீர்வை முன்வைக்கவில்லை. ஆகவே பௌத்த பிக்குகளினால் இப்பிரச்சினைக்கு தீர்வை வழங்க முடியும்.  இதற்கு  அனைத்து   மக்களும்  தனிப்பட்ட அரசியல் வேறுப்பாடின்றி ஆதரவு வழங்க வேண்டும்.

எதிர்வரும் 07ம் திகதி பொதுபல சேனாஅமைப்பின் புதிய கொள்கை திட்டங்கள் வெளியிடப்படும்,அரபு  நாட்டின் கலாச்சாரங்கள்  எமது நாட்டுக்கு  பொருத்தமற்றது. என்பதே  எமது பிரதான கொள்கையாகும். நாட்டில் தேசிய  நல்லிணக்கத்தை பின்பற்றும்   முஸ்லிம்  மக்கள்  பாரம்பரியமாக  பின்பற்றிய கலாச்சாரங்கள் தற்போது மறக்கடிக்கப்பட்டுள்ளது.சிறந்த முஸ்லிம் தலைவர்களும்,சாதாரண மக்களும்   அன்று  ஏனைய  இனங்களுடன்  ஒருமைப்பாட்டுடனே தேசிய  கலாச்சாரத்திற்கு அப்பாற் செல்லாமல் வாழ்ந்தார்கள்.

ஆனால்  காலப்போக்கில் சிறந்த மனிதர்களின் செயற்பாடுகள்  மழுங்கடிக்கப்பட்டு அடிப்படைவாதிகளின் செல்வாக்கு அரசியல்வாதிகளினால் ஊக்குவிக்கப்பட்டன. நாட்டின்  கல்வி முறைமைக்கு பொருத்தமற்ற  மத்ரஷா உள்ளிட்ட அடிப்படைவாத  பாடசாலைகள் முழுமையாக  இல்லாதொழிக்க வேண்டும். அப்பாவி  இளைஞர்களை  தற்கொலை   குண்டுதாரிகளாக  மாற்றுவதே  இந்த அடிப்படைவாத   பாடசாலைகளின்  பிரதான நோக்கம்.  முஸ்லிம்  சமூகமும் முதலில் தங்களின்  பிள்ளைகளுக்கு நாட்டு பற்றினையும்,  தேசிய   கலாச்சாரத்தையும் குரானில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மை தன்மைகளையும் முறையாக போதிக்க வேண்டும் என்றார்