சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கு- அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா ஆஜர்

360 0

சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் மைத்துனரும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா இன்று காலை ஆஜரானார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் மைத்துனரும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்குகள் இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் நிலங்கள் வாங்கியது தொடர்பாகவும், லண்டனில் சட்ட விரோதமாக சொத்துக்கள் வாங்கியது தொடர்பாகவும் அவர் மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிவர்த் தனை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க ராபர்ட் வதேரா ஏற்கனவே முன் ஜாமீன் பெற்று இருந்தார். அவரது முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இதற்கிடையே அவர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல 6 வார காலத்துக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நேற்று அனுமதி அளித்து இருந்தது.

சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே பலமுறை விசாரணை நடத்தி இருந்தார்கள்.

இந்தநிலையில் அவர் இன்று காலை 10.40 மணி அளவில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆவதற்கு முன்பு வதேரா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

13-வது முறையாக நான் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக செல்கிறேன். இதுவரை என்னிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கிட்டத்தட்ட 80 மணிநேரம் விசாரணை நடத்தி விட்டார்கள். ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்காக நான் போராடி வருகிறேன். அரசியல் காரணத்துக்காக எனக்கு எதிரான வேட்டை தொடர்ந்து நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.