சம்பூர் அனல்மின் நிலையம் அமைப்பதில் இந்தியா பூரண தயார்நிலையிலேயேஉள்ளது. இலங்கையின் இறுதி தீர்மானம் தெரிவிக்கப்படும் நிலையில் உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்போம் என இந்தியா தெரிவித்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி ஆகியோரின் சந்திப்பிலும் இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனி னும் திரவ இயற்கை வாயுவும்பயன்படுத்தப்படவேண்டும் என இலங்கை கூறுவது சாத்தியமற்ற விடயம் எனவும் இந்திய மத்திய அரசு வலியுறுத்தியது.
இந்தியாவுக்கு வஉடக சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இலங்கை ஊடகவியலாளர்கள் குழுவை இந்திய எரிசக்தி மற்றும் அனல்மின் அமைச்சின் செயலாளர் பி.கே.பூஜாரி சந்தித்து பேச்சு நடத்தியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,சம்பூர் அனல் மின் நிலையம் அமைக்கப்படுவது தொடர்பில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் ஆதரவும் உள்ளது. திருகோணமலையின் சம்பூர் பகுதியில் இவ்வாறான அனல்மின் நிலையம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் இலங்கையின் சூழலியல் சிக்கல்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பு தொடர்பிலும் கடந்த காலத்தில் இருந்து ஆராயப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் இவ்வாண்டு பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி இலங்கையின் சுற்றுச்சூழல் மத்திய அவதான நிலையம் எமக்கு அறிக்கையொன்றை முன்வைத்திருந்தது. சம்பூர் அனல்மின் நிலையம் அமைக்கப்பட சாதகமான நிலைமைகளை அதில் சுட்டிக்காட்டியுள்ள போதிலும் சில நிபந்தனைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர். எனினும் இலங்கை தரப்பு முன்வைத்துள்ள நிபந்தனைகளை எம்மால் ஏற்றுகொள்ள கூடிய வகையிலேயே உள்ளது.
எவ்வாறு இருப்பினும் சம்பூர் அனல்மின் நிலையம் அமைப்பது தொடர்பில் இந்தியாவின் பக்கம் இருந்த அனைத்து செயற்பாடுகளும் சரியாக நிறைவடைந்துள்ளன. எனினும் இலங்கையின் இறுதி தீர்மானம் இன்னும் எமக்கு வராத காரணத்தினால் நாம் அதற்கான அனுமதி கிடைக்கும் வரையில் காத்திருக்கின்றோம்.
இலங்கையின் முடிவுகள் எமக்குக் கிடைத்தவுடன் அடித்த 9 தொடக்கம் 12 மாதங்களுக்குள் சம்பூர் அனல் மின்நிலையம் அமைப்பது தொடர்பிலான உரிய நிறுவனங்களுக்கான விலைமனுக்கோரல் விடப்படும். அதன் பின்னர் அடுத்த 3 தொடக்கம் 5 ஆண்டுகளுக்குள் அனல்மின் நிலையம் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும் . மேலும் இந்த சம்பூர் அனல்மின் நிலையம் அமைக்கப்படும் நிலையில் 25ஆண்டுகளுக்கு அதற்கான பயனை பெற்றுக்கொள்ள முடியும். அதன் பின்னர் மீளவும் புனரமைக்கப்படவேண்டும். எனினும் அமைவையும் செயற்பாடுகளையும் பொருத்து கால நீடிப்பு தொடர்பில் ஆராய வாய்ப்புகள் உள்ளன.
அதேபோல் கடந்த முறை இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறேசென மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின்போது இந்த சம்பூர் அனல்மின் நிலையம் அமைப்பக்கப்படும் நிலையில் அதற்கான பாவனையில் திரவ இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவது தொடர்பில் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
இதில் இந்தியாவுக்கு எந்த சிக்கலும் இல்லை. எனினும் நிலக்கரிக்கு பதிலாக இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படுவது அதிகளவிலான செலவையும் காலத்தையும் எடுக்கும். இப்போது ஆரம்பிக்கப்பட திட்டம் இருக்குமாயின் இயற்கை திரவ எரிவாயுவை பயன்படுத்துவதாயின் இன்னும் பத்து ஆண்டுகள் காத்திருக்கவேண்டிய நிலைமை ஏற்படும். ஆகவே திரவ இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவதை விடவும் நிலக்கரியின் பாவனைகள் மிகவும் உகந்தது என்றார்.