போதை மறுவாழ்வு மையத்தில் மர்மமாக இறந்த போலீஸ்காரர் – உடலை தோண்டி பிரேத பரிசோதனை

374 0

திருச்சி போதை மறுவாழ்வு மையத்தில் மர்மமாக இறந்த போலீஸ்காரர் உடலை தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுத்து டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்கிறார்கள்.

திருச்சி கே.கே.நகர் அன்பழகன் தெருவில் ‘லைப் அண்ட் கேர் சென்டர்’ என்ற பெயரில் போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இதை அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் நடத்தி வருகிறார்.

இந்த மையத்தில் சுமார் 25 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த போலீஸ் ஏட்டு தமிழ்ச்செல்வன் (வயது 35) என்பவரும் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். போதை பழக்கத்திற்கு அடிமையான அவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

போதை பழக்கத்தை மறந்து மீண்டும் பணியில் சேர முடிவு செய்த அவர், நண்பர்கள் மூலம் திருச்சி கே.கே.நகரில் இயங்கி வரும் போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சேர்ந்தார்.

இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி அவர் இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு மையத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக மாத்திரை கொடுத்தபோது திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டதால் திருச்சி பிரபல ஆஸ்பத்திரியில் சேர்த்ததாகவும், ஆனால் தமிழ்ச்செல்வன் சிகிச்சை பலனில்லாமல் இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ்ச்செல்வனின் உறவினர்கள் நேற்று முன் தினம் திருச்சி வந்து உடலை பெற்றுச்சென்றதுடன், சொந்த ஊருக்கு கொண்டு சென்று உடலை அடக்கம் செய்தனர். அப்போது தமிழ்ச்செல்வன் உடலில் காயங்கள் இருந்ததை பார்த்து உறவினர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

நேற்று திருச்சி போதை மறுவாழ்வு மையத்திற்கு வந்த உறவினர்கள், தமிழ்ச்செல்வனின் உடைமைகளை எடுத்துச்செல்வதாக கூறியுள்ளனர். அப்போது அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்த ஒருவர் தமிழ்ச்செல்வன் அடித்துக் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அதனால்தான் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர்.