விண்வெளி ஆராய்ச்சிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயற்கைகோள்கள் – வானியல் ஆய்வாளர்கள்

281 0

புவிவட்டப்பாதையில் சுற்றி வரும் செயற்கை கோள்கள் விண்வெளி ஆராய்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் என்றும் வானியல் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவை வழங்க ‘ஸ்டார்லிங்க்’ என்ற திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது.

இதற்காக சுமார் 12 ஆயிரம் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக தலா 227 கிலோ எடை கொண்ட 60 செயற்கைகோள்கள் ஒரே நேரத்தில் ‘பால்கன் 9’ ராக்கெட் மூலம் கடந்த மாத இறுதியில் விண்ணில் செலுத்தப்பட்டன.

அனைத்து செயற்கைகோள்களும் புவிவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாகவும், அவை நேர்மறையான சக்திகளை உருவாக்கி, கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருப்பதாகவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அண்மையில் தெரிவித்தது.

இந்த நிலையில், விண்வெளியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைகோள்கள் ரெயில் போல ஒரே நேர்கோட்டில் அணிவகுத்து செல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவு வெளியாகி ‘வைரலாக’ பரவி வருகிறது.

புவிவட்டப்பாதையில் சுற்றி வரும் அந்த செயற்கை கோள்கள், நட்சத்திரங்கள் நேர்கோட்டில் அணிவகுத்து செல்வதைப் போல் காட்சி அளிக்கின்றன. செயற்கைகோள்களில் பொருத்தப்பட்டுள்ள சோலார் தகடுகள் சூரிய ஒளியை பிரதிபலிப்பதால் அவை நட்சத்திரங்கள் போன்று ஜொலிக்கின்றன.

இந்த செயற்கைகோள்களை வெறும் கண்களால் கூட காண முடியும் என்பதால் வானியல் தோற்றத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இது விண்வெளி ஆராய்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் என்றும் வானியல் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த செயற்கைகோள்கள் ரேடியோ அதிர்வெண்களையும் உமிழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.