ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் தண்ணீர் – குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை!

255 0

குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க 25 மில்லியன் லிட்டர் குடிநீரை ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து, டேங்கர்கள் மூலம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் குடிதண்ணீர் பிரச்சினை மக்களை வாட்டி வதைத்தபடி உள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளும் வறண்டு விட்டதால் குடிதண்ணீர் பிரச்சினை உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,257 மில்லியன் கன அடியாகும். ஆனால் தற்போது 4 ஏரிகளிலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. இதைத் தொடர்ந்து சென்னை குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய மாற்று ஏற்பாடுகளை குடிநீர் வாரியம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி சென்னை புறநகர்களையொட்டி இருக்கும் குவாரிகள் மற்றும் விவசாயக் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டது. சிக்கராயபுரம் உள்பட 22 குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக வினியோகம் செய்யப்படுகிறது. கல் குவாரிகளில் இருந்து சுமார் 30 மில்லியன் குடிநீர் கிடைத்தது. தற்போது அந்த அளவு குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் சென்னையில் பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டமும் கணிசமாக குறைந்து போனது. இதனால் சென்னையில் கடந்த மாதம் முதல் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடும் நிலைக்கு சென்றுள்ளது. சென்னை மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் அளவும் கொஞ்சம், கொஞ்சமாக குறைக்கப்பட்டு வருவதால் மக்களின் தவிப்பு அதிகரித்துள்ளது.

வீராணம் ஏரியில் இருந்து வரும் தண்ணீர், நென்மேலி, மீஞ்சூரில் கடல் நீரை சுத்திகரித்து கிடைக்கும் தண்ணீர் ஆகியவையும் எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீரும் சென்னையை எட்டிப் பார்க்கவில்லை.

இதனால் சென்னை நகர மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 1200 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகிக்க வேண்டிய நிலையில், அது கொஞ்சம், கொஞ்சமாக குறைக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் வரை 650 மில்லியன் லிட்டர் குடிநீரே தினமும் கிடைத்தது. தற்போது நாள் ஒன்றுக்கு 525 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னை குடிநீர் வாரியம் வழங்கி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 316 விவசாய கிணறுகள், 40 ஆழ்துளை கிணறுகள் மூலமாகவும் தண்ணீரை எடுத்து வினியோகித்து வருகிறார்கள். சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து தண்ணீர் எடுப்பது குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு மிகப்பெரிய போராட்டமாகவும், சவாலாகவும் மாறியுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை நகர மக்களுக்கு தொடர்ந்து குடிநீர் வழங்க வேறு என்னென்ன தற்காலிக மாற்று ஏற்பாடுகளை செய்யலாம் என்று ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது 2001-ம் ஆண்டு சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது ஈரோடு மற்றும் நெய்வேலியில் இருந்து ரெயில் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. இப்போதும் அதே பாணியில் ரெயிலில் சென்னைக்கு குடிநீர் கொண்டு வரலாமா? என்று அதிகாரிகள் ஆலோசித்தனர். அதன் தொடர்ச்சியாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கடந்த 15 தினங்களுக்கு முன்பு சென்னை முதல் மேட்டூர் வரை ரெயில் பாதை பகுதிகளில் உள்ள குடிநீர் ஆதாரங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள்.

குறிப்பாக மேட்டூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீரை எடுத்து அதை ரெயில் மூலம் சென்னைக்கு கொண்டு வருவது பற்றி ஆய்வு செய்தனர். தற்போது மேட்டூர் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் வேலூர் மாவட்டம் வரை குழாய்களில் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் வரை மேட்டூரில் இருந்து தண்ணீர் வருகிறது. இதில் எந்த நகர் பகுதியில் பதிக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்கள், ரெயில் நிலையத்துக்கு மிக அருகில் உள்ளது என்று ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது ஜோலார் பேட்டை பகுதியில் பதிக்கப்பட்டுள்ள கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள், ரெயில் நிலையம் அருகில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில்கள் மூலம் சென்னைக்கு குடிநீர் எடுத்து வர முடியும் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

மேட்டூர் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் தற்போது வேலூர் மாவட்டத்துக்கு தினமும் 120 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் அந்த கூட்டுக் குடிநீர் திட்டத்தின்படி வேலூர் வரை தினமும் 160 மில்லியன் லிட்டர் குடிநீரை கொண்டு வர முடியும். அதாவது கூடுதலாக 40 மில்லியன் லிட்டர் குடிநீரை தினமும் பெற முடியும்.

அந்த 40 மில்லியன் லிட்டர் குடிநீரில், 25 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னைக்கு ஜோலார் பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து, ரெயில் டேங்கர்கள் மூலம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு ஈரோட்டில் இருந்து ரெயில் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டபோது 60 டேங்கர்கள் இணைக்கப்பட்டு தண்ணீர் எடுத்து வரப்பட்டது.

தற்போது 50 டேங்கர்கள் மூலம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் எடுத்து வரப்பட உள்ளது. இதற்காக தென்னக ரெயில்வே அதிகாரிகளுக்கும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கும் இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒவ்வொரு டேங்கரிலும் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீதம் மொத்தம் 50 டேங்கர்களில் ஒரு நடையில் 25 மில்லியன் லிட்டர் தண்ணீரை சென்னைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

டேங்கர் வாடகை, பம்பிங், சுத்திகரிப்பு, வினியோகம் உள்பட இந்த தண்ணீர் ஏற்பாடுக்கு தமிழக அரசுக்கு ரூ.154.3 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 10 தடவை ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு வேகன்கள் மூலம் குடிநீர் எடுத்து வரப்படும். அந்த தண்ணீர் வில்லிவாக்கம் குடிநீரேற்று நிலையத்தில் சுத்தம் செய்த பிறகு சென்னை நகர மக்களுக்கு வழங்கப்படும்.

இதற்கிடையே வரும் நாட்களில் தண்ணீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் எடுத்து வரப்படும் குடிநீர், சென்னை குடிநீர் வாரியத்தின் தேவையில் வெறும் 5 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்யும். எனவே சென்னை மக்களுக்கு வழங்கும் குடிநீர் வினியோக அளவை மேலும் குறைக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

தற்போது வினியோகிக்கப்பட்டு வரும் நாள் ஒன்றுக்கு 525 மில்லியன் லிட்டர் குடிநீர் அளவை, 500 மில்லியன் லிட்டர் குடிநீராக குறைக்க முடிவு செய்துள்ளனர். ஜூன் 3-வது வாரத்தில் இருந்து அதாவது இன்னும் 10 நாட்களில் குடிநீர் வாரிய வினியோகம் அளவு குறையும். இதனால் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும்.

நவம்பர் மாதம் வரை தினமும் 500 மில்லியன் லிட்டர் குடிநீரே சென்னைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்கிடையே திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் எங்கெங்கு தண்ணீர் உபரியாக உள்ளது என்ற ஆய்வும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் கணிசமான அளவுக்கு தண்ணீரை சென்னை குடிநீருக்கு தினமும் பெற செய்யப்பட்டு வருகிறது.

சென்னை புறநகரில் கடல்நீரை குடிநீராக்கும் மேலும் 2 மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் இருந்து சுமார் 1800 மில்லியன் லிட்டர் தண்ணீரை பெற முடியும். ஆனால் இந்த மையங்கள் செயல்பாட்டுக்கு வர இன்னும் 2 ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது.

எனவே தற்போது உருவாகியுள்ள குடிநீர் பஞ்சத்தை விரட்ட ரெயிலில் தண்ணீர் கொண்டு வருவது போன்ற தற்காலிக திட்டங்களில் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் சென்னை மக்களுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 825 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைத்தது. தற்போது 300 மில்லியன் லிட்டர் குறைந்து 500 மில்லியன் லிட்டர் குடிநீரே கிடைக்கிறது.

இன்னும் சில மாதங்களுக்கு இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளதால் குடிநீர் பிரச்சினை மிகப்பெரிய பிரச்சினையாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.