பிளஸ்-2 பொதுத்தமிழ் பாடபுத்தகத்தின் அட்டை படத்தில் பாரதியார் காவி தலைப்பாகை அணிந்துள்ளது போன்ற காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு பள்ளி பாட புத்தகங்களை மாற்றி அமைத்துள்ளது. இந்த புதிய புத்தகங்களை நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விக்கழக தலைவர் வளர்மதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பிளஸ்-2 பொதுத்தமிழ் பாடபுத்தகத்தின் அட்டை படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த அட்டையில் ஒரு பெண் நடனமாடுவது போன்ற காட்சி, கோவில் படங்கள் மற்றும் பாரதியார் தலைப்பாகையுடன் இருக்கும் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.
அதில் பாரதியார் காவி தலைப்பாகை அணிந்துள்ளது போல படம் இருக்கிறது. இந்த படம்தான் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
இதுதொடர்பாக தி.மு.க.வின் முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறும்போது, பாரதியாரை யாராவது காவி தலைப்பாகையுடன் பார்த்திருக்கிறார்களா? பாட புத்தகம் மூலம் காவியை திணிக்கும் செயலாக இதை பார்க்க முடிகிறது.
அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறும்போது, பாரதியார் காவி தலைப்பாகையுடன் இருப்பதை இப்போது தான் முதன் முதலாக பார்க்கிறேன். நான் நீண்ட காலமாக மாணவர்களுக்கு தமிழ்பாடம் கற்றுக்கொடுத்து வருகிறேன்.
அவர் காவி தலைப்பாகை அணிந்த படத்தை நான் இதுவரை பார்த்தது இல்லை. அவர் எப்போதுமே வெள்ளை தலைப்பாகை அணியும் வழக்கத்தை கொண்டிருந்தார் என்று கூறினார்.
மேலும் ஒரு தமிழாசிரியர் கூறும்போது, ஏற்கனவே வரலாற்று புத்தகத்தில் சில சர்ச்சைக்குரிய விஷயங்கள் இருந்ததால் அவை நீக்கப்பட்டன. இப்போது பிளஸ்-2 பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய விஷயம் இடம்பெற்றுள்ளது.
இதன் அட்டை படத்தில் இந்து கோவில் படத்தை அச்சிட்டு இருக்கிறார்கள். இது இந்துக்கள் மட்டும் தான் தமிழுக்கு பாடுபட்டவர்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
கிறிஸ்தவர்களாக இருந்த வீரமாமுனிவர், ஜி.யூ. போப் போன்றவர்கள் தமிழுக்காக பாடுபட்டு இருக்கிறார்கள். அதேபோல முஸ்லிமான உமறுபுலவரும் தமிழக்கு அரும்பாடுபட்டவர்களில் ஒருவர் என்று கூறினார்.
இதுசம்பந்தமாக பாடநூல் கழக தலைவர் வளர்மதியிடம் கேட்டபோது, காவி மயமாக்கும் எண்ணத்தில் இவ்வாறு வெளியிட்டதாக கருதுவது தவறு. இது மாநில அரசு வெளியிட்ட புத்தகம். கல்வித்துறையில் அரசியலோ, மதமோ விளையாடுவதற்கு இடம் இல்லை. இதில் தவறு நடந்துள்ளது. இந்த பிரச்சனைக்கு விரைவில் உரிய தீர்வு காணப்படும் என்று கூறினார்.