அதிகாரத்தை பிரித்துகொள்வதை காட்டிலும் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்-ஜி.எல்

229 0

அதிகாரத்தை பிரித்துகொள்வதை காட்டிலும் பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து நாட்டை முழுமையாக மீட்டெடுப்பதே தற்போதைய தேவைப்பாடாகுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியல் நிலைமைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ஜி.எல்.பீரிஸ் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“பதவிகளைப் பிரித்தெடுப்பது குறித்து, கலந்துரையாட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராகவும், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகவும் நியமிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறு பதவிகளைப் பிரித்தெடுப்பது குறித்தே அதிக அரசியல்வாதிகள் கவனம் செலுத்துகின்றனர். அதாவது நாடு தீப்பற்றும்போது பதவி குறித்து கனவு காண்பது ஏற்புடையதல்ல.

மேலும் பயங்கரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து நாடு பலவீனமடைந்த நிலையில் காணப்படுகின்றது. ஆகையால் அதனை அனைவரும் ஒன்றிணைந்து கட்டியெழுப்புவது அவசியமாகும்” என ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.