மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பல்கலைக்கழகம் குறித்து விரைவில் தகவல்களை வழங்குமாறு பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஊழல் மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு, இந்த அறிவித்தலை வழங்கியுள்ளது.
அதற்கமைய கற்பித்தல் செயற்பாடுகளுக்காக பங்குபற்றும் விரிவுரையாளர்களின் எண்ணிக்கை, உபவேந்தர் பற்றிய தகவல்கள், அந்த நிறுவனம் குறித்த வேறு தகவல்கள் என்பன ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ளன.
இந்த நிறுவனம் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு முன்னெடுக்கும் ஆரம்பகட்ட விசாரணைகளுக்கென கோரப்பட்ட தகவல்களை முன்வைக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் வழிகாட்டலில் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இதனையடுத்து குறித்த பல்கலைக்கழகம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தலைமையில் நாடாளுமன்ற உயர் கல்வி ஆலோசனைக் குழு ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.