இன்று நாட்டில் நிலவிவரும் சிக்கலான அரசியல் நிலவரத்தின் பௌத்த பிக்குகளின் தலையீடு எதிர்காலத்தில் நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணசன் தெரிவித்துள்ளார்.
அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில், கடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக பாரிய அளவு ஆதாரத்துடன் இன்று கேள்விக்குறியாகி இருக்கும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா அதேபோல் ரிஷாட் பதியுதீன் இதற்கு ஆதரவாக அனாவசியமாக குரல் எழுப்பிய முன்னாள் ஆளுநர் அசாத்சாலி போன்றவர்கள் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை.
அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக பயங்கரவாதத்திற்கு துணை போனார் என்ற குற்றச்சாட்டு மட்டுமல்லாது சொத்துக் குவிப்பு விவகாரத்திலும் இன்று கேள்வி எழுப்பியுள்ளது. அதேபோல் போர் நடந்த காலத்தில் பயங்கரவாதத்திற்கு துணை போனார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் பல தமிழ் இளைஞர்கள் 20 வருடத்திற்கும் அதிகமாக சிறைவாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
20 வருடங்களுக்கு முன்பு அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு இருந்த சொத்து விபவரங்களுடன் ஒப்பிடும் பொழுது இன்று நாட்டிலே விரல் விட்டு எண்ணக்கூடிய செல்வந்தராக இவர் காணப்படுவது சம்பந்தமாக நேர்மையான விசாரனை உடனடியாக நடாத்தப்பட வேண்டும். ஊழல் நிறைந்த இவரது செயல்பாடு சம்பந்தமாக நியாயமான விசாரனை நடாத்தப்பட வேண்டும். அதேபோல் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா பல காணொளிகளில் முஸ்லிம் தீவிரவாதத்தை வெளிப்படுத்தியிருப்பது நாட்டு மக்களுக்கும் புலனாய்வு பிரிவினருக்கும் தெரிந்திருக்கின்றது.
இருப்பினும் இவர்கள் இருவருக்கும் எதிராக எவ்வித நேரடி நடவடிக்கைகளையும் எடுக்காமல் அரசாங்கம் மௌனித்திருப்பது நாட்டை நேசிக்கும் அனைத்து மக்களுக்கும் செய்யும் பாரிய துரோகமாகும். அதேநேரம் இந்த மூன்று நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அதிகாரம் மிக்கவர்களாக காணப்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நாட்டு மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை உள்ளது. இவர்கள் இருவரும் சுய இலாபத்திற்காக செயல்படுவது இன்று மக்களுக்கு புரிந்துள்ளது. இந்த இரண்டு தலைமைகளையும் மக்கள் உதாசீணப்படுத்துவதற்கு தயாராக உள்ளனர் என்பதை புரிந்து கொள்ள கூடியதாக உள்ளது.
இந்த இரண்டு தலைவர்களும் விட்டதவறினால் இன்று பௌத்த பிக்குகள் அரசியல் தலையீடு செய்ய வேண்டி வந்துள்ளது. எது எப்படி இருப்பினும் பௌத்த பிக்குகளின் அரசியல் தலையீடுகள் தொடருமேயாயின் இது சிறுபான்மை மக்களுக்கு எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இவர்கள் தமிழ் மக்களுக்கும் எதிராக திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆகவே நாம் தமிழர்கள் மிகவும் அவதானத்துடன் செயல்பட வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ எமது தமிழ் மக்களின் நலனை முன்னெடுக்கப் போவதில்லை. மாறாக நாம் தான் எமது மக்களின் நலன் சம்பந்தமாக போராட வேண்டி உள்ளது. இன்றைய கால கட்டத்தில் உணர்ச்சி வசப்படாமல் நாம் செயல்படுவோமேயாயின் எதிர்காலத்தில் எமது அரசியல் உரிமைகளப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
முஸ்லிம் சமூகத்தின் நலன் கருதி இந்த மூன்று அரசியல்வாதிகளும் தாங்கள் நிரபராதிகள் என்று நிரூபிக்காமல் எந்தவொரு பதவியினையும் வகிக்க கூடாது. அதேநேரம் தமிழ் மககள் தங்கள் சமூகம் சார்ந்நதவருக்கே வாக்களிக்க வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். எதிர்வரும் பல தேர்தல்களில் தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிப்பதன் ஊடாக தமது நலன்களை பேணி பாதுகாத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.