விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த இராணுவம் உட்பட அரச படையினருக்கு எதிராக எந்த அடிப்படையிலும் சட்ட நடவடிக்கை எடுக்க இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றார்.
தனது இந்தத் தீர்மானத்தை தெளிவுபடுத்தி ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக நாடுகளுக்கும் கடிதம் எழுதவுள்ளதாகவும் ஜனாதிபதி, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவைக்குத் தெரிவித்திருக்கின்றார்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் போது, வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய வகையில் கலப்பு நீதிமன்ற விசாரணையொன்றை அமைக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது.
எனினும் தற்போது யுத்தக் குற்றங்கள் மற்றும் பாரதூரமான கொடூரங்களை முன்வைத்து இராணுவம் உட்பட அர படையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க இடமளிக்க முடியாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்தவாரம் செவ்வாய் அன்று தனது அமைச்சரவையின் முக்கிய உறுப்பினர்களை அவசரமாக சந்தித்த போது அறிவித்திருக்கின்றார்.
இந்த சந்திப்பில் சுதந்திர கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க, மகிந்த சமரசிங்க, மகிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா, எஸ்.பி.திஸாநாயக்க, அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி மங்கள சமரவீர, விஜயதாஸ ராஜபக்ச, நவீன் திஸாநாயக்க, சஜித் பிரேமதாஸ, ரவி கருணாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.