வடக்கு கிழக்கு தமிழர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சரியான தீர்மானம் எடுத்திருந்தால் எமக்கு இவ்வளவு இழப்புக்கள் வந்திருக்காது.எனவே இனியாவது தமிழர்கள் தங்களுக்கு பொருத்தமான தேசியத் தலைவரை எதிர்வரும் தேர்தல் ஊடாக தெரிவு செய்ய வேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெற்ற சமூர்த்தி நிவாரண உருதி பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த நாட்டில் உள்நாட்டு போரிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத தாக்குதல் வரை தமிழ் மக்களே கொல்லப்பட்டு வருகின்றனர்.இலங்கையில் எத்தனையோ சமூகம் வாழ்கின்ற போதிலும் இன்றுவரை தமிழர்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர்.நாட்டில் இடம்பெற்ற போரினால் தமிழர்கள் உடமைகளை இழந்தனர் அதற்கு மேலாக பல உறவுகளை இழந்துள்ளனர்.
நாம் கட்சிக்கு ஓர் தலைவர் வேண்டும் என்பதை நாட்டுக்கு ஓர் தேசிய தலைவர் உருவாக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். தமிழர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு தேர்தலின் போது சில நிர்ப்பந்தத்தினால் வாக்களிக்காது விட்டனர். இதனால் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவை சந்தித்தது.
இதனால் நாட்டில் உள்நாட்டு போர் உக்கிரமடைந்தது.முள்ளிவாய்க்கால் இறுதி போரில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். இதே வரலாற்று தவறினை இனியும் தமிழ் மக்கள் செய்யக் கூடாது.எனவே இனிவரும் தேர்தலில் சரியான தெரிவினை மேற்கொண்டு முழு நாட்டுக்குமான தேசிய தலைவர் ஒருவரை தெரிவு செய்யவேண்டும் என்றார்.