பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்திய தூதரகம் அளித்த இப்தார் விருந்துக்கு வந்த சிறப்பு அழைப்பாளர்களை அந்நாட்டு அதிகாரிகள் விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமாபாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் சார்பில் நேற்று மாலை சில முக்கிய பிரமுகர்களுக்கு இப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருந்தில் பங்கேற்க வருமாறு சிறப்பு அழைப்பாளர்களாக சிலருக்கும் தகவல் அனுப்பப்பட்டது.
இந்த அழைப்பாளர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட பாகிஸ்தான் அதிகாரிகள் இந்திய தூதரகம் அளிக்கும் இப்தார் விருந்தில் பங்கேற்க வேண்டாம் என்று மிரட்டல் விடுத்தனர். கண்டுபிடிக்க முடியாத ரகசிய தொலைபேசி எண்களில் இருந்து வந்த இந்த மிரட்டல்களுக்கு அடிபணியாமல் பலர் இப்தார் விருந்துக்கு வந்தனர்.
ஆனால், இப்தார் விருந்து நடைபெற்ற செரேனா ஹோட்டலை சுற்றிலும் நின்றிருந்த பாகிஸ்தான் அதிகாரிகள் இப்தார் விருந்துக்கு வந்த நூற்றுக்கணக்கானவர்களை அவமானப்படுத்தி, திருப்பி அனுப்பினர். சிலரை மிரட்டும் பாணியில் விரட்டியும் அடித்தனர்.
பாகிஸ்தான் அரசின் இந்த கேவலமான செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தானுக்கான உயர் தூதர் அஜய் பிஸாரியா, ‘பாகிஸ்தான் அதிகாரிகளின் நாகரிகமற்ற இதுபோன்ற மிரட்டல்போக்கு தூதரகங்களுக்கு இடையிலான ராஜதந்திர முயற்சிகளை சீரழித்து விடும்.
எங்கள் இப்தார் நிகழ்ச்சிக்கு வந்து, பாகிஸ்தான் அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்ட அனைவரிடமும் நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.