நாகையில் வேதாரண்யம் சுற்றுவட்டார கடலோர கிராமங்களில் 3வது நாளாக கடல் சீற்றம் ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் நடைபெறுவதால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அனுமதி கிடையாது. இதனால் பைபர் படகு மீனவர்கள் குறைந்த அளவு தூரம் சென்று மீன்பிடித்து வந்தனர். இந்த நிலையில், வேதாரண்யம் அருகே கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தில் நேற்று முன்தினம் சூறைக்காற்று வீசியது.
இதனால் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதை தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் நேற்றும் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் கடல் சீற்றமாக காணப்பட்டதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் வேதாரண்யம் பகுதியில் மீன்கள் வரத்து குறைந்து காணப்பட்டது.
தொடர்ந்து வேதாரண்யம் சுற்றுவட்டார கடலோர கிராமங்களில் 3வது நாளாக இன்றும் கடல் சீற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கடல் சீற்றம் குறைந்த உடன் மீன்பிடிக்க செல்வோம் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.