இலங்கை இழந்த ஜி.எஸ்.பி ஏற்றுமதி வரிச் சலுகையை மீளப் பெற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ பேச்சுக்களை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உயர்மட்டத் தலைவர்களுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தூதுக்குழுவினர் ஆரம்பித்துள்ளனர்.
பெல்ஜியம் தலைநகர் பிரசல்சிற்கு பயணமாகிய பிரதமர் பெல்ஜியப் பிரதமருடன் இரு தரப்புப் பேச்சுக்களில் ஈடுபட்ட நிலையிலேயே, இன்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுடனான பேச்சுக்களை ஆரம்பித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத் தலைமையகங்கள் அமைந்துள்ள பிரசல்ஸ் நகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றைய தினம் சென்றடைந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் அலுவலக பிரதானியும் சட்டம் ஒழுங்கு அமைச்சருமான சாகல ரத்நாயக்க உட்பட தூதுக் குழுவினரை பிரசல்ஸிற்கான தூதுவர் ரொட்னி பெரேரா தலைமையிலான தூதரக அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.
இதற்கமைய இன்றைய தினம் இடம்பெறவுள்ள பேச்சுக்களின்போது மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக் கூறல் ஆகிய விடையங்களை அடிப்படையாக வைத்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் இடைநிறுத்தப்பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் ஏற்றுமதி வரிச்சலுகையை மீளப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுக்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஈடுபடவுள்ளார்.
எனினும் இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு அரசாங்கம் புதிதாக மேற்கொள்ளவுள்ள குற்றவியல் சட்டக் கோவை திருத்தச் சட்டமூலம் பெரும் தடையாக இருக்கும் என்பதால் குறித்த திருத்தச் சட்டமூலத்தை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.