சிவாஜிலிங்கம் மீதான பயங்கரவாத வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

295 0

சிவாஜிலிங்கம் மீது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும்  ஜூலை மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2018 ஆம்  ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரது பிறந்தநாளை கொண்டாடினார் என்றும் விடுதலை புலிகள் தொடர்பான பதாகை ஒன்றும் வைத்திருந்தார் என்றும் குற்றஞ்சாட்டி முன்னாள் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம் மீது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வல்வெட்டி துறை பொலிஸார் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த வழக்கில் இன்று முன்னிலையாகுமாறு எம். கே. சிவாஜிலிங்கத்திற்கு பருத்தித்துறை  நீதவான் நீதி மன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது.

இதனால் இன்று மன்றுக்கு முன்னிலையாகிய எம். கே. சிவாஜிலிங்கத்தை மன்று வளாகத்தில் வைத்து குறித்த விடயம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குமாறு நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டிருந்தது.

இதனடிப்படையில் எம். கே. சிவாஜிலிங்கம் மன்று வளாகத்தில் வாக்குமூலம் வழங்கினார். குறித்த பயங்கரவாத குற்றச்சாட்டு வழக்கிற்கு மூத்த சட்டத்தரணி சிறிகாந்தா ஆஜராகியிருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம்  திகதிக்கு தள்ளிப் போடப் பட்டுள்ளதாகவும் . இதேவேளை குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைது செய்யப்படாமலிருக்க முன் பிணை கோரிய மனு சட்டத்தரணி நடராசா சுஜீவன் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு மீதான விசாரணை ஜூன் மாதம் 7 ஆம்  திகதி எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாகாண சபை உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.