பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்காமல் வெளியில் இருந்து விமர்சிப்பதை விட எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த குழுவின் விசாரணை நடவடிக்கைகளில் பஙகுகொள்வது அவசியமாகும்.
எதிரணி உறுப்பினர்கள் பங்கேற்ப்பதால் சிக்கல்கள் எதுவும் ஏற்படப் போவதில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.
அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ;
பாராளுமன்ற தெரிவுக்குழுவினூடாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்படாத வகையிலேயே அமைந்திருந்தன.ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் அனைவரும் பொறுப்புக்கூறுவது அவசியமாகும்.
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கவென நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகளை ஊடகங்களில் வெளியிடுவதை போன்று ஏனைய பாராளுமன்ற குழுக்களின் விசாரணைகளையும் ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் மாத்திரமல்லாமல் ஏனைய நாடுகளிலும் பாராளுமன்றத்தில் நியமிக்கப்படும் இதுபோன்ற விசாரணைக்குழுக்களின் நடவடிக்கைகளை ஊடகங்களில் வெளியிடுகின்றன.
அதேபோன்று அந்த நாடுகள் ஊடகங்ளும் இது தொடர்பில் பொறுப்புடன் செயற்படுகின்றன. ஆகவே இந்த தெரிவுக்குழுவின் விசாரணைகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் போது தகவல்களை திரிபுபடுத்தாமல் வெளியிடுவது அவசியமாகும் என அவர் தெரிவித்தார்.