லசந்தவின் கொலைக்கு உரிமை கோரி தற்கொலை செய்துகொண்ட இராணுவ வீரரின் தொலைபேசி பதிவுகள் கண்டுப்பிடிப்பு

347 0

lasaஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை தானே கொலை செய்ததாக கூறி கடந்த வாரம் தூக்கிட்டு தற்காலை செய்துக் கொண்ட இராணுவ அதிகாரியின் தொலைபேசி பதிவுகளை கண்டுப்பிடித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த இராணுவ அதிகாரியின் தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்தி போன்றவை அழிக்கப்பட்ட விபரங்களை தெரிந்து கொள்வதற்காக காவல்துறையினர் தொலைபேசி சேவை வழங்குநரின் உதவியை நாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க 2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.

குறித்த இராணுவ அதிகாரி தனது சேவையில் இருந்து 2007ஆம் ஆண்டு ஓய்வுப் பெற்றுள்ளார்.

அத்துடன் லசந்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் அதிகாரியான பிரேமானந்த உடலகமவை விடுதலை செய்யுமாறு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு அவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

குறித்த இராணுவ அதிகாரி தற்கொலை செய்துக் கொண்டுள்ள போது அவரது வீட்டில் தனிமையிலேயே இருந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டவர் மூச்சு திணறியே உயிழந்துள்ளார் என கேகாலை மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆனால் குறித்த கடிதத்தில் இருந்த கையெழுத்து தனது தந்தையுடையதே என இராணுவ அதிகாரியின் மகன் கூறியுள்ளார்.

அத்துடன் இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் அதிகாரியான பிரேமானந்த உடலகமவை ஏன் மலிந்த உடலகம என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என காவல்துறையினர் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, குறித்த இராணுவ அதிகாரி முன்னரே மில்லேனியம் சிட்டியில் உள்ள வீடொன்றில் ஆயுத களஞ்சியம் ஒன்று இயங்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.