70 வருடங்களாக இலங்கையில் தொடரும் தமிழினவழிப்பு என்ற தலைப்பில் நோர்வே பாராளுமன்றத்தில் கருத்தரங்கு – நோர்வே ஈழத்தமிழர் அவை-

812 0

27.05.2019 அன்று நோர்வேயின் சிவப்புக் கட்சியும் நோர்வே ஈழத்தமிழர் அவையும் இணைந்து ’70 வருடங்களாக இலங்கையில் தொடரும் தமிழினவழிப்பு’ என்ற தலைப்பில் அரசியல் விவாதக் கருத்தரங்கை நோர்வேஜிய நாடாளுமன்ற வளாகத்தினுள் இருக்கும் அரங்கில் நடத்தியது.

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவைத் தலைவர் பேராசிரியர் சிறிரஞ்சன், அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் வெளிவிவகாரப் பொறுப்பாளர் திருச்சோதி, ஸ்டீபன் புஸ்பராஜா நோர்வே ஈழத்தமிழர் அவை, தமிழ்நெட் ஆசிரியர் ஜெயச்சந்திரன், இலங்கை ஆசிரியர்கள் சங்க முன்னாள் தலைவரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான காதர் மாஸ்ரர், பர்மீய மனித உரிமைச் செயற்பாட்டாளரும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் 2013இல் பிரேமன் நகரத்தில் நடத்திய ஈழத்தமிழர்களுக்கான நீதி விசாரணையில் நீதிபதிகளில் ஒருவராக இருந்த மௌங்கு ஸார்னி, நோர்வே சிவப்புக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பியோனர் மொக்ஸ்னஸ், பிரான்சு நாட்டு அரசியல் ஆய்வு மாணவி சாருகா தேவகுமார் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர். முழு நிகழ்ச்சியின் நெறியாள்கையை பேராசிரியர் இளங்கோ பாலசிங்கம் கையாண்டார்.

நோர்வே சிவப்புக் கட்சித் தலைவர் பியோனர் பேசும்பொழுது, ‘இன்றைய நோர்வே பிரதமர் (வலதுசாரிக் கட்சி) எதிர்க்கட்சியாக இருந்தபொழுது, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானக் குரலை எல்லா இடங்களிலும் பதிவு செய்திருந்தார், ஆனால், ஆளும் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றது முதல் ஈழத்தமிழர்களை மறந்தது ஏன்’ என்று வினவினார்.தொடர்ந்து,ஈழத்தின் இறையாண்மையை ஏற்றுக்கொண்டு, ஈழத்தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளதென்பதை அனைத்துலக நாடுகளும் முன்மொழிய வேண்டும்’ எனவும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் பின்னரான 10 ஆண்டுகள், புவியியல் அரசியலில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக சூழ்ச்சிகள் மேற்கொள்ளும் மேற்குலக நாடுகள், இலங்கைத் தீவில் தமிழரின் நிகழ்கால நிலைமைகள், மார்ச் 2019 ஐ.நா. மனித உரிமை அமைப்பின் இலங்கைத் தீவுக் குறித்த அறிக்கை, உயிர்த்த ஞாயிறுக்குப் பின்னரான சூழல் குறித்த உரைகளோடு, தமிழீழ வரலாறு, தமிழின வரலாறு குறித்த பார்வைகள் கொண்ட உரைகளும் கருத்தரங்கில் இடம்பெற்றிருந்தது.

நாடாளுமன்றக் கருத்தரங்கில் பேசியவர்களால் பேசப்பட்ட ஒருசில விடயங்களில் முக்கியமானவை பின்வருமாறு:

1. மொழி, பண்பாடு, தாயகம், கூட்டு உளவியல் என அனைத்திலும் வரலாற்று வழியிலும் பூகோள ரீதியிலும் ஈழத்தமிழர்கள் இலங்கைத்தீவில் தனித்துவமானவர்கள்.
2. டச்சு, ஒல்லாந்தர்கள், பிரித்தானியர்களின் காலனியாதிக்கமே தமிழீழ இறையாண்மையை பறித்தது.
3. ஈழத்தமிழர்களும் சிங்கள மக்களும் இலங்கைத்தீவினுள்ளான அரசியல் உரிமையை பகிர்ந்த இறையாண்மை மூலமாக தீர்மானித்துக்கொள்ளும் கோரிக்கைகளும் போராட்டங்களும் தொடர்ந்தும் தோல்வியடைந்த பின்னரே, 1976இல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை (தனித்தமிழீழக் கோரிக்கை) முன்மொழியப்பட்டது, அதற்கான அங்கீகாரம் வழங்கும் விதமாக, 1977 இலங்கைத் தேர்தலில் தமிழர்கள் வாக்களித்திருந்தனர்.
4. அமைதி வழிப்போராட்டங்கள் நசுக்கப்பட்டப் பின்னரே, ஆயுதவழி போராட்டத்தினை சுமக்க தமிழர்களை வரலாறு கட்டாயப்படுத்தியது.
5. 30 வருடங்களுக்கு வருடப் போராட்டங்களும் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனவழிப்பு நோக்கம் கொண்ட, திட்டமிட்ட, படை நடவடிக்கையை அப்பாவித் தமிழர்கள் மீது இலங்கை அரசு ஏவியது. அதன் பின்னரான 10 ஆண்டுகளிலும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு தொடர்ந்து நடந்தது, இன்னும் நடக்கிறது.
6. 7 கோடி மக்களின் அரசியல் பிரதிநிதியாக இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றமும் தமிழீழப் பிரதேசத்தின் வீற்றிருக்கும் இலங்கையின் வடக்கு மாகாண சபையும் தமிழின அழிப்பை விசாரிக்க பன்னாட்டு நீதி விசாரணை தேவை என்னும் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது.
7. இலங்கை அரசு முன்மொழியும் உள்ளக நீதி விசாரணையை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
8. இதுவரை பன்னாட்டு அரங்கிலும் மனித உரிமை அவையிலும் கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றியதே இல்லை.
9. ஒற்றையாட்சி அதிகாரத்தின் கீழான தீர்வு நிரந்திரமானதல்ல, நோர்வேயும் பன்னாட்டு சமூகங்களும் பன்னாட்டு சட்டவரம்புகளின் அடிப்படையில் தமிழர்களின் தேசத்தை அங்கீகரித்து, அவர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
10. தமிழ் மொழியினை தாய் மொழியாகக் கொண்டு வாழும் இஸ்லாமியர்களுக்கு உரிய அரசியல் தீர்வினை உள்ளடக்கிய தீர்வாக இருத்தல் வேண்டும்.
11. ஈழத்தமிழர்களுக்கு உரிய வரலாற்று வழி இறையாண்மை, போராடிப் பெற்ற இறையாண்மை, பரிகாரம் / தீர்வுக்குரிய இறையாண்மையை ஏற்றுக்கொண்டு இலங்கைத் தீவிலும் பன்னாடுகளிலும் வாழும் இலங்கைத் தீவின் வம்சாவளித் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தல் வேண்டும்.
12. போரின் பொழுதும் போரின் பின்னரும் பாதிக்கப்பட்டு, வாழ்விடம் இழந்து, வாழ்க்கை இழந்து வாடும் எண்ணற்ற விதவைகள், குழந்தைகள், உடல் ஊனமுற்றோர், படுகாயமடைந்து உடல் வலிமை இழந்தோர்களுக்கு நோர்வேயும் பன்னாட்டுச் சமூகமும் போதிய நிதியினை வழங்கி, அவர்களது வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்த எல்லா வகையிலும் உறுதுணையாக இருத்தல் வேண்டும்.
13. இணைத் தலைமை நாடுகளில் அங்கம் வகித்த நோர்வே, தன்னிச்சையாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து போர் தொடங்கிய இலங்கை அரசினை கேள்விக்குட்படுத்துவது தார்மீகக் கடமையாகிறது. அதேவேளை, உலகெங்கும் அகதி முகாம்களில் சிதறி வாழும் பல லட்சம் தமிழர்களை இலங்கைத் தீவிற்குள் எவ்வித இராணுவ ஆக்கிரமிப்பும் அற்ற தமிழர் தாயகத்தில் வாழ வழிவகை செய்யவேண்டும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

-நோர்வே ஈழத்தமிழர் அவை –