டிரம்ப் உடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்த அதிகாரிக்கு கிம் ஜாங் அன் மரண தண்டனை விதித்து நிறைவேற்றியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்- வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் இடையேயான 2-வது சந்திப்பு கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாமில் ஹனோய் நகரில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் சுமூக உடன்பாடு எட்டப்படாததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
பேச்சுவார்த்தை தோல்வியால் அதிருப்தி அடைந்த வடகொரியா மீண்டும் அடவாடி நடவடிக்கைகளில் ஈடுபட துவங்கியது. குறிப்பாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை, குறுகிய அளவிலான தூரம் செல்லும் ஏவுகணை சோதனை என படிப்படியாக மீண்டும் அடவாடியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், டொனால்டு டிரம்ப் உடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்த, அமெரிக்காவுக்கான வடகொரியாவின் சிறப்பு தூதரான கிம் ஹயோக் சோல் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு விட்டதாக தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடகொரியாவின் துப்பாக்கிச்சுடுதல் குழுவினரால், உச்ச தலைவருக்கு துரோகம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் கிழ், கிம் ஹயோக் சோலுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதமே மிரிம் விமான நிலையத்தில், மேலும் நான்கு மூத்த வெளிநாட்டு அதிகாரிகள் தூக்கிலிடப்பட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வேறு எந்த அதிகாரிகளின் பெயரும் வெளியிடப்படவில்லை.
வடகொரியா விவகாரங்களை கையாளும், தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம், இவ்விவகாரம் பற்றி கருத்து கூற மறுத்து விட்டது. அதேபோல், உச்சி மாநாட்டின் போது தவறு செய்ததற்காக கிம் ஜாங் அன்னின் மொழிபெயர்ப்பாளர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தென்கொரிய செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.