ரஜினியும், கமலும் இணைவார்களா? – மக்கள் நீதி மய்ய துணைத்தலைவர் பேட்டி

336 0

அரசியல் களத்தில் ரஜினியும், கமலும் இணைவார்களா என்ற கேள்விக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர் மகேந்திரன் பதில் அளித்துள்ளார்.திரைத்துறையில் நண்பர்களாக இருந்து வந்த ரஜினியும் கமலும் அரசியலில் நேர் எதிரிகளாக செயல்பட்டு வருகின்றனர். இருவரது கொள்கைகளும் மாறுபட்டு இருக்கின்றன.

பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட்டு சுமார் 4 சதவீத வாக்குகள் வாங்கி இருக்கிறார். 4 தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகள் கடந்து இருக்கிறார். சட்டமன்ற தேர்தலுக்கு உற்சாகமாக தயாராகி வருகிறார்.

ரஜினியும் சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து கட்சி பணிகளில் இறங்கியுள்ளார்.

அரசியல் களத்தில் இருவரும் இணைந்து செயல்பட்டால் பெரிய வெற்றி பெறலாம் என்று கணிப்புகள் கூறுகின்றன. ரஜினியும் கமலும் இணைவார்களா என்ற கேள்விக்கு ஒரு வார இதழில் பேட்டியளித்துள்ள கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர் மகேந்திரன் பதில் அளித்து இருக்கிறார்.

மகேந்திரன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

எங்கள் தலைவர் கமலுக்கும் ரஜினிக்கும் நல்ல நட்பும் தோழமையும் உண்டு. ஆனால் அரசியலை பொறுத்தவரை அவருடன் கூட்டணி வைக்கப்படுமா என்பதை காலமும் தலைவரும்தான் முடிவு செய்யவேண்டும். தவிர, கூட்டணி வி‌ஷயத்தால் எங்கள் தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

ஆகவே, கூட்டணி பற்றி நாங்கள் அவசரப்பட மாட்டோம். தேசியக்கட்சிகள் வி‌ஷயத்திலும் எங்கள் நிலைப்பாடு இதுதான்’.

இவ்வாறு அவர் கூறினார்.