ஹேரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் மன்னார் நீதிமன்றத்தின் சிறைக்கூடத்தில் மயங்கி வீழ்ந்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
சுமார் 902 மில்லி கிராம் நிறை கொண்ட ஹெரோயின் போதைப் பொருளுடன் தலைமன்னார் பியர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று வியாழக்கிழமை காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ரி.சரவண ராஜா குறித்த நபரைத் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டதோடு, விசாரணைக்கான பிறிதொரு திகதியை அறிவித்து நீதவான் வழக்கை ஒத்தி வைத்தார்.
இந்தநிலையில் மன்னார் நீதிமன்றத்தின் சிறைக்கூடத்தில் குறித்த நபர் அடைக்கப்பட்டார்.
எனினும் குறித்த சந்தேக நபர் குறித்த சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்ட சற்று சிறிது நேரத்தில் மயங்கி வீழ்ந்துள்ளார்.
குறித்த விடையம் மன்னார் நீதவானின் கவனத்திற்கு உடன் கொண்டு செல்லப்பட்ட நிலையில் நீதவானின் உத்தரவுக்கு அமையக் குறித்த நபர் உடனடியாக மன்னார் பொது வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.