வருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை தொடர்பில் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளகியுள்ள குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து சி.ஐ.டி.யினர் தொடர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், அந்த குற்றச்சாட்டும், அதனோடு இணைந்த கருத்தடை குற்றச்சாட்டின் பின்னணியிலும் குருணாகல் பிரதேசத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளதாக தகவல்கள் சில வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
குருணாகல், குளம் அமைந்துள்ள பகுதியை அண்மித்த கட்டடம் ஒன்றினை கொள்வனு செய்த விவகாரத்தில், குறித்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நண்பர் ஒருவருக்கும் வைத்தியர் ஷாபிக்கும் இடையே நிலவிய போட்டியே இந்த குற்றச்சாட்டுக்களுக்கு காரணமாகியுள்ளதாக குறிப்பிடப்படும் நிலையில் அந்த விடயம் குறித்தும் சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு விசாரணைகளில் அவதானம் செலுத்தியுள்ளது.
அதன்படி குருணாகல் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், அங்கிருந்து வேறு ஒரு இடத்துக்கு இடமாற்றி அது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் அவதானம் திரும்பியுள்ளது.
விடயம் குறித்து விசாரிக்கும் சிறப்பு சி.ஐ.டி.குழுவிடம் இது தொடர்பில் அலோசித்து, தேசிய பொலிஸ் ஆணைக் குழுவுடனும் கலந்துரையாடி பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன ஊடாக இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உள்ளக தகவல்கள் தெரிவித்தன.
எவ்வாறாயினும் வைத்தியர் ஷாபிக்கு எதிரான சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டு தொடர்பிலும் சட்ட விரோத கருத்தடை விவகாரம் தொடர்பிலும் விசாரிக்க விஷேட சி.ஐ.டி. குழுவொன்று குருணாகல் பகுதிக்கு அனுப்பட்டுள்ளது.
உதவி பொலிஸ் அத்தியட்சர் திசராவின் கீழ் அனுப்பட்டுள்ள இந்த குழு குருணாகலிக்கு சென்று தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், இன்று மாலை வரை சுமார் 45 வாக்கு மூலங்களை இவ் விவகாரம் தொடர்பில் சி.ஐ.டி. பதிவு செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அத்துடன் இன்று கெக்கிராவ – கலாவெவ பகுதியில் உள்ள வைத்தியர் ஷபியின் இல்லம் ஒன்றும் விஷேட பொலிஸ் குழுவொன்றினால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. அந்த வீட்டில் இருந்து எவ்வித சந்தேகத்துக்கு இடமான ஆவணங்களோ, பொருட்களோ மீட்கப்படவில்லை என பொலிஸார் கூறினர்.
இதனிடையே வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபி கருத்தடை செய்துள்ளாரா என்பதை பரிசீலுக்குமாறு வலியுறுத்தி இன்று மாலை வரை 335 முறைப்பாடுகள் வரை கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் 299 முறைப்பாடுகள் குருணாகல் போதன அவைத்தியசாலைக்கும், தம்புள்ளை ஆதார வைத்தியசாலை மற்றும் கலேவல தள வைத்தியசாலைகளுக்கும் அதனை அண்டிய பொலிஸ் நிலையங்களுக்கும் ஏனைய முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.