அசாத் சாலி, ஹிஸ்புல்லா மீதான குற்றச்சாட்டில் நிறைவேற்றதிகாரம் செயற்படவில்லை-பவித்ரா

447 0

பெரும்பாலான மக்களினால்  குற்றஞ்சாட்டப்பட்டுள்ள   மேல்மாகாண  மற்றும் கிழக்கு மாகாண  ஆளுநர்கள் தொடர்பில் ஏன்  நிறைவேற்றதிகாரம் செயற்படவில்லை.

ஆளுநர் பதயிவின் மதிப்புக்களும் தற்போது குறைவடைந்துள்ளது.    குண்டு துளைக்காத வாகனம் அடுத்த வருடம் எதிர்க்கட்சி தலைவர் பதவி வகிக்கவுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பயன்படும் . என பாராளுமன்ற உறுப்பினர்  பவித்ரா வன்னியராச்சி தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று  இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேல்மாகாண ஆளுநர்  அசாத் சாலி,  கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக  ஆரம்பத்தில் இருந்து பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதுவரையில் இவையனைத்தும் வெறும் குற்றச்சாட்டுக்களாகவே காணப்படுகின்றன.பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது  குற்றச்சாட்டுக்களை தொடுத்து நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டு வர முடியும். ஆளுநர்களுக்கு எதிராக எம்மால் செயற்பட முடியாது.

இவர்களின் விவகாரத்தில் நிறைவேற்று துறை அதிகாரம் அமைதி காப்பது ஒருதலைப்பட்சமானது. குண்டு தாக்குதலை தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது நிறைவேற்றுதுறை அதிகாரத்தை ஜனாதிபதி  பயன்படுத்தினார் .

ஆனால்  ஆளுநர்களின் விடயத்தில்  இவர்  எந்நடவடிக்கைளையும் மேற்கொள்ளவில்லை. ஜனாதிபதியும் அடிப்படைவாதிகளின் ஆதரவினை எதிர்பார்க்கின்றார் என்பது  மக்கள் அறிய கூடியதாகவுள்ளது.  ஆளுநர்களின் பதவி பொறுப்புக்கள் மற்றும் உரித்துடையதாக்கப்பட்டுள்ள விடயங்களை  ஆளுநர்கள் மறந்து  அரசியல்வாதிகள் போல் தேவையற்ற அரசியல் பிரச்சாரங்களை முன்னெடுப்பதால் ஆளுநர் பதவியின் மதிப்பு மழுங்கடிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.