போகம்பரை மைதானத்தில் நடைபெற்று வரும் சிறிலங்காவின் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில், கோல்ஊன்றிப் பாய்தல் போட்டியில் 21 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவிலும், 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவிலும், யாழ் மாவட்ட மாணவர்கள் புதிய சாதனை படைத்து தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
நேற்று முன்தினம் நடைபெற்ற 21 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனா கல்லுரி மாணவி அனித்தா ஜெகதீஸ்வரன் 3.30 மீற்றர் உயரம் பாய்ந்து, 2014ஆம் ஆண்டு தேசிய மட்டங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியில் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி மாணவி பவித்திராவின் 3.17 என்ற சாதனையை முறியடித்தார்.
பளை மத்திய கல்லூரி மாணவி ஜே.சுகிர்தா 3.20 மீற்றர் உயரம் தாண்டி இரண்டாவது இடத்தைப் பெற்றார்.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில், கோலூன்றிப் பாய்தலில் அனித்தா 3.41மீற்றர் பாய்ந்திருந்தார். எனினும் இப்போட்டியில் அவரால் அதே தூரத்தை மீண்டும் முறியடிக்கமுடியவில்லை.
அதேவேளை, 21 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர் தடை தாண்டி ஓட்டத்திலும், தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவி அனித்தா வெண்கலப்பதக்கம் வென்றார்.
அத்துடன், நேற்று நடைபெற்ற 17வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லுரி மாணவன் ஏ.புவிதரன் 3.80 மீற்றர் பாய்ந்து, முன்னைய சாதனையை முறியடித்தார்.
இந்தப் பிரிவில்இ ஆர்.ஜதுசன் 3.60 மீற்றர் தாண்டி இரண்டாம் இடத்தையும்இ யு. சலக்சன் 3.55 மீற்றர் தாண்டி முன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.