தி.மு.க. தொழிற்சங்க செயலாளர் சண்முகம் மேல்-சபை எம்.பி. ஆகிறார்

379 0

தி.மு.க.வில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தப்படி வைகோ மேல்- சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார். இன்னொரு இடத்துக்கு தி.மு.க. தொழிற்சங்க பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

தமிழகத்தில் இருந்து டெல்லி மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட 6 பேரின் பதவி காலம் ஜூன் மாதம் முடிகிறது.

அ.தி.மு.க.வில் மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜுன், டி.ரத்தினவேல், ஆர்.லட்சுமணன், தி.மு.க.வில் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் டி.ராஜா ஆகியோரது பதவி காலம் முடிகிறது.

கனிமொழி பாராளுமன்ற எம்.பி.யாகி விட்டதால் அவரது மேல்-சபை எம்.பி. பதவி முடிவுக்கு வந்து விட்டது.

புதிய 6 மேல்- சபை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூன்) நடைபெறுகிறது.

சமீபத்தில் நடந்த 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அந்த கட்சி மேல்-சபையில் ஒரு இடத்தை இழக்கிறது. தி.மு.க. 13 இடங்களை கைப்பற்றியதால் கூடுதலாக ஒரு மேல்-சபை எம்.பி. பதவியை பெறுகிறது.

இதன் மூலம் மேல்-சபையில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு தலா 3 இடங்கள் கிடைக்க உள்ளது.

பாராளுமன்ற தேர்தலின் போது பா.ம.க.வுக்கு ஒரு மேல்-சபை தொகுதி வழங்குவதாக அ.தி.மு.க. சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதன்படி பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி மேல்-சபை எம்.பி.யாக வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து 2 மேல்-சபை உறுப்பினர்களாக கே.பி.முனுசாமி, தம்பிதுரை ஆகியோர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

தி.மு.க.வில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தப்படி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மேல்- சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார்.

இன்னொரு இடத்துக்கு தி.மு.க. தொழிற்சங்க பொதுச்செயலாளர் சண்முகம் (தொ.மு.ச.) எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

மீதம் உள்ள ஒரு எம்.பி. பதவியை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்காக காங்கிரஸ் கேட்கும் என தெரிகிறது. இதுகுறித்து தி.மு.க. தலைமை விரைவில் முடிவை அறிவிக்கும்.